மனுக்களை ஆடையாக அணிந்து வந்தவர் கைது
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதற்கு சரிவர பலன் இல்லாததால் கடுப்பான ஒருவர், அந்த மனுக்களை சட்டையாகவும், வேட்டியாகவும் அணிந்து கொண்டு ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பூட்டினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் கரந்தை, மேல திருவாதி சாலையில், பாவா கோவில் என்ற கோவில் உள்ளது. இது நெல் கொள்முதல் காலங்களில் அரசு கொள்முதல் மையமாக செயல்படுவது வழக்கம். நெல் மூட்டைகளைக் கொண்டு வருவோர் செருப்புடன் உள்ளே வந்து செல்வார்களாம்.
மேலும் பீடி, சிகரெட், மது ஆகியவற்றையும் கோவில் வளாகத்திற்குள் உட்கார்ந்து நுகர்வார்களாம்.எனவே இந்த கோவிலை நெல் கொள்முதல் மையமாக அரசு பயன்படுத்தக் கூடாது என இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக கரந்தை, பூக்குளம் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் முதல்வர், அறநிலையத்துறை, நுகர்பொருள் வாணிபத் துறை ஆகியோருக்கு கிட்டத்தட்ட 90 முறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு பலனும் இல்லை.
இதனால் அதிருப்தி அடைந்த சுப்ரமணியன் தான் அனுப்பிய புகார்களின் நகல்களை சட்டையாகவும், வேட்டியாகவும் அணிந்து கொண்டு ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்களிடம், இதுவரை 90 முறை மனு கொடுத்து விட்டேன். 91வது முறையாக மனு கொடுக்க வந்தேன் என்று கூறியுள்ளார் சுப்ரமணியன்.
ஆனால் அவரை உள்ளே அனுமதிக்காத போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications