காதலி வீட்டுக்கு குண்டு வைத்த ராணுவ வீரர்!!!
வேலூர்:முன்னாள் காதலியின் குடும்பத்தையே கொல்ல அவர்களது வீட்டில் பெரும் அளவிலான வெடிகுண்டுகளை வைத்த ராணுவ வீரரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். இந்தக் குண்டுகள் வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு பொன்னப்பன் என்ற கணவர் இருந்தார். அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
செல்வி பீடி சுற்றும் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவருக்கு பூபதி என்கிற மகனும், தேவி என்கிற மகளும் உள்ளனர். உடன் மாமியார் முனியம்மாளும் வசித்து வருகிறார்.
வியாழக்கிழமை இரவு பீடி வேலைய முடித்து விட்டு செல்வியும், தேவியும் தூங்கச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விழித்தெழுந்த செல்வி, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கு ஒரு வயர் போவதைப் பார்த்தார்.
அந்த வயர் முடிந்த இடத்தில், குறுகலான இடத்தில் பெருமளவில் வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ந்த செல்வி வீட்டை விட்டு வெளியேறி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் வந்து பார்த்தபோது அந்த வெடிகுண்டுகளை இணைக்கும் வயர் வீட்டுக்கு வெளியே வந்து பக்கத்தில் உள்ள ஆள் இல்லாத வீட்டின் குளியலறையில் முடிந்தது தெரிய வந்தது. அந்த வயர், குளியலரை மின்சார போர்டில் இணைக்கப்பட்டிருந்தது. அதன் மெயின் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்தது. அதைப் போட்டால் வெடிக்கும் வகையில் குண்டு செட் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அப்பகுதியில் குடியிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். வெடிகுண்டுகளை செயலிழக்கும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
மொத்தம் 15 ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி அதை பாலாற்றுக்குக் கொண்டு சென்று செயிழக்கச் செய்தனர்.
இந்த குண்டு வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கும். இந்த குண்டுகளை வைத்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அதில் செல்வராஜ் என்பவர்தான் குண்டு வைத்தவர் என்பது தெரிய வந்தது.
செல்வராஜும், தேவியும் காதலித்து வந்தனர். செல்வராஜ் ராணுவ வீரர் ஆவார். ஜபல்பூரில் பணியில் உள்ளார்.
கடந்த ஆண்டு, தேவியுடன் தலைமறைவானார் செல்வராஜ். இதை அறிந்த செல்வி மற்றும் குடும்பத்தினர் தேவியைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டனர். மேலும் இதுதொடர்பாக செல்வராஜின் குடும்பத்துடன் சண்டையிலும் ஈடுபட்டனர்.
இதனால் வேதனை அடைந்த செல்வராஜின் அண்ணன் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். தேவியால்தான் இத்தனைப் பிரச்சினையும் என்று அவர் நினைத்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தேவியும், செல்வராஜுடன் பேசுவதில்லை, பழகுவதில்லை. சமீபத்தில் அண்ணனின் ஒரு ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஊருக்கு வந்தார் செல்வராஜ்.
வந்தவர் விடுமுறை முடிந்த பின்னரும் பணிக்குப் போகாமல் தேவி குடும்பத்தைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்தில் வெடிகுண்டு வைத்து விட்டுத் தப்பி விட்டார். அவரைப் பிடிக்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications