கிராமப் பகுதிகளில் ஹெல்மெட் குழப்பம்- போலீசுக்கும் மகா குழப்பம்
சென்னை:ஜூலை 1ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் கிராமப் பகுதிகளில் அமலாக்கப்படுமா என்பது குறித்து குழப்பமான நிலை நிலவுகிறது.
கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
முதல் சில நாட்கள் கெடுபிடி அதிகமாக இருந்தது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும் மதுரை இடைத் தேர்தலை மனதில் வைத்தும் ஹெல்மெட் அணியாதவர்களிடம் கெடுபிடியை குறைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இப்போது ஹெல்மட் அணிவதையே பெரும்பாலோர் நிறுத்திவிட்டனர்.
இந் நிலையில் ஜூலை 1 முதல் தேதியிலிருந்து மாநாகராட்சி அல்லாத பகுதிகளிலும், கிராமங்களிலும் கட்டமாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நகர்ப் பகுதிகளிலேயே கெடுபிடி குறைந்துவிட்டதால் ஹெல்மட் வாங்குவதா வேண்டாமா என்ற வடிவேலு குழப்பத்தில் கிராமப் புற மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக அமலில் இல்லாததால் இந்தக் குழப்பம். இதே குழப்பம் போலீசாருக்கும் ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்ற குழப்பதில் அவர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
