ராமர் பாலம்: சு.சுவாமி வழக்கில் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:ஆதாம் பாலத்தை குடைந்து சேது சமுத்திரம் அமைப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜனதா கட்சி தலைவர் சுப்பரமணியம் சுவாமி, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஆகியோர் சேது சமுத்திரத்திர திட்டத்தில் ராமர் பாலத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் முன் விசாரணை வந்தது.
அப்போது ராமகோபாலன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமானுஜம், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 35 கி.மீ வரை ராமர் பாலம் என்னும் ஆதாம் பாலம் உள்ளது. இது புராதனச் சின்னம், அதனால் இதை இடிக்க தடை விதிக்க வேண்டும். வேறு வழியில் சேது சமுத்திர திட்டத்தில் செயல்படுத்த கால்வாய் அமைக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் வழக்கறிஞர் கோபாலன், மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் ராமர் பாலமே இல்லை. கால்வாய் தோண்டலாம் என மத்திய அரசின் சுற்றுச் சூழல்துறை அனுமதி கொடுத்துள்ளது.
இந்த பகுதியில் ராமர் பாலம் இல்லை என பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வறிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்க முடியாது. 6வது வழியில் கால்வாய் தோண்டும் பணிக்கும் தடை விதிக்க முடியாது.
ராமர் பாலம் புராதனச் சின்னமா இல்லையா என மத்திய அரசும், தொல்பொருள் ஆய்வுத்துறையும் 4 வாரத்திற்குள் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ராமர் பாலம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டதா, அதை தேசிய புராதன சின்னமாக கருதலாமா என்றும், ராமர் பாலத்திற்கு பாதிப்பில்லாமல் வேறு வழியில் இந்த கால்வாய் அமைக்க முடியுமா எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது.
இந்த வழக்கு முடியும் வரை ராமர் பாலத்தை இடிக்கும் பணியை நிறுத்தி வைக்க முடியுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
மேலும் விசாரணையை அடுத்த மாதம் 23ம் தேதி வரை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications