புழல் சிறை: மாம்பழத்திற்குள் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
சென்னை:
சென்னை புழல் மத்திய சிறைக்குள் மாம்பழத்திற்குள் வைத்து கஞ்சாவைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில், நேற்று வியாசர்பாடியைச் சேர்ந்த பிரான்சிஸ், பூம்புகார் நகரைச் சேர்ந்த சிவராஜ், அம்பத்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகியோர் பார்வையாளர் வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களது கையில், மாம்பழங்கள், ஆப்பிள்கள், மிக்சர் பொட்டலங்கள் உள்ளிட்டவை இருந்தன. அப்போது அங்கிருந்த காவலர்கள், மாம்பழங்கள் மிகவும் வித்தியாசமாக காட்சி அளிப்பதைப் பார்த்தனர்.
அவர்களிடம் நெருங்கி மாம்பழங்களை வாங்கிப் பார்த்தபோது அவற்றின் தோல் காய்ந்திருந்தது தெரிய வந்தது. மேலும் வழக்கமான மாம்பழத்தின் வடிவிலும் அவை இல்லை.
இதையடுத்து மாம்பழங்களை அழுத்திப் பார்த்தபோது அவற்றுக்குள்ளிருந்து சிறு சிறு பொட்டலங்கள் வந்து விழுந்தன. அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவற்றைப் பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.
இதேபோல அவர்களிடமிருந்த மிக்சர் பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது அவதிலும் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் மாம்பழங்களை துளை போட்டு அவற்றிலிருந்து சதைப் பகுதியை நீக்கி விட்டு உள்ளே கஞ்சாவைத் திணித்துக் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications