கலாமை ஆதரிக்க பாஜக தயார்?:3ம் அணி தலைவர்களுடன் கலாமை சந்தித்தார் ஜெ
சென்னை:ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடக் கோரி அப்துல் கலாமை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இரு தினங்களுக்கு முன் மூன்றாவது அணியினர் கலாமை சந்திக்கச் சென்றபோது ஜெயலலிதா மட்டும் போகவில்லை. தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டார். இதற்கு இந்த புதிய கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள யார் பெரியவர் சண்டையே காரணம் என்று தெரிகிறது.
இந் நிலையில் தனது வெற்றி உறுதி என்றால் போட்டியிடத் தயார் என்று கலாம் அறிவித்தார். இதை மூன்றாவது அணித் தலைவர்களே எதிர்பார்க்கவில்லை.
இதையடுத்து அவருக்கு ஆதரவு திரட்டும் வேலையில் அவர்கள் களமிறங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எதிர்பார்த்தற்கு மாறாக பாஜகவின் ஆதரவு கிடைத்துள்ளது.
நேற்று மாலை பாஜக கூட்டணித் தலைவர்களை 3வது அணித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, அமர்சிங், ஓம் பிரகாஷ் செளதாலா, தம்பிதுரை, பிருந்தாவன் கோஸ்வாமி உள்ளிட்ட தலைவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது அத்வானி, ஜஸ்வந்த் சிங், ராஜ்நாத் சிங், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் திணேஷ் திரிவேதி, பிஜூ ஜனதாதளம் சார்பில் பி.கே.திரிபாதி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் உடன் இருந்தனர்.
நீண்ட நேரம் இரு கூட்டணிகளின் தலைவர்களும் பேசினர். அப்போது கலாம் போட்டியிடத் தயார் என்றால் அவரை ஆதரிக்க தயார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கலாம் தயாரில்லை என்றால் பைரோன் சிங் ஷெகாவத்தை மூன்றாவது அணி ஆதரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
நீண்ட நேரம் இரு கூட்டணிகளின் தலைவர்களும் பேசினர். இருப்பினும் எந்த உடன்பாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்றும் கூடி இரு தரப்பும் பேச இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
இச் சந்திப்புக்குப் பின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்துல் கலாமை மீண்டும் சந்திக்கவுள்ளோம். பல்வேறு கட்சிகளுடன் நடத்திய பேச்சுக்கள் குறித்து அவரிடம் தெரிவிப்போம். அதன் பிறகும் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உறுதியாக இருந்தால் அவரை ஆதரிக்க வேண்டும் என பாஜக கூட்டணி தலைவர்களிடம் கோரினோம்.
அப்போது, அப்துல் கலாம் போட்டியிடாவிட்டால் ஷெகாவத்தை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து கூட்டணித் தலைவர்களுடன் பேசி முடிவெடுப்போம் என்றார்.
பாஜகவின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கலாமை மீண்டும் சந்தித்து அவரை தேர்தலில் போட்டியிட வைக்க மூன்றாவது அணியினர் தீவிரமாகியுள்ளனர்.
இதற்காக அவரை மீண்டும் சந்தித்துப் பேச நேற்று நேரம் கோரினர். இதையடுத்து இன்று அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார் கலாம்.
இதைத் தொடர்ந்து மூன்றாவது அணித் தலைவர்களுடன் சென்று கலாமை சந்திக்க ஜெயலலிதா திடீரென இன்று காலை டெல்லி கிளம்பிச் சென்றார்.
அதே போல வைகோவும் டெல்லி விரைந்தார்.
பின்னர் தனது அணித் தலைவர்களுடன் கலாமை ஜெயலலிதா சந்தித்தார். மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்.
பின்னர் வாஜ்பாய் வீட்டுக்கு இவர்கள் சென்றனர். அங்கு வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் பிரதமர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த் சிங் ஆகிேயாரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்ேபாது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நிலை குறித்து விளக்கி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே காங்கிரசின் ஆதரவு இல்லாத நிலையில் மீண்டும் போட்டியிட கலாம் சம்மதித்தாரா என்று தெரியவில்லை.
கலாம் போட்டியிட சம்மதிக்காவிட்டால் ஷெகாவத்தையே 3வது அணி ஆதரிக்கக் கூடும் அல்லது அவருக்கு ஆதரவாக ஓட்டெடுப்பிலிருந்து விலகியிருக்கும் முடிவை எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஷெகாவத்தின் வேட்பு மனுவைத் தயாரிக்கும் பணியை பாஜக கூட்டணி தொடங்கி விட்டது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் கையெழுத்துப் பெறும் பணியையும் அது முடுக்கி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications