மதுரை இடைதேர்தல் ஜூலை 3க்கு ஒத்திவைப்பு?:கருணாநிதி உண்ணாவிரதமா?-டி.ஆர்.பாலு மறுப்பு
டெல்லிமதுரை மேற்குத் தொகுதியில் வருகிற 26ம் தேதி நடக்கவிருந்த இடைத் தேர்தலை ஜூலை 3ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக அனைத்துக் கட்சிகளும் புகார் கூறி வருகின்றன. மேலும் முன்னாள் திமுக மேயர் குழந்தைவேலுவின் கார் பெட்ரோல் குண்டு வீசி தீவைத்து எரிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்ேவறு வழக்குகளும் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் குவிந்து வருகின்றன.
தொடர்ந்து பதட்டமான நிலை நிலவி வருவதால் வாக்காளர்களிடையே பீதி நிலவுகிறது. இதையடுத்து மதுரை மேற்குத் தொகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால் தேர்தலை ரத்து செய்ய நேரிடும் என்று தேர்தல் ஆணையம் தமிழக அரசை எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து டிஜிபி மதுரைக்கு விரைந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட அவர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டார்.
இந் நிலையில் மதுரை இடைத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையர்களுடன் விவாதிப்பதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று மாலை டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்று கேட்டபோது, அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
டெல்லி சென்ற நரேஷ் குப்தாவுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தீவிர ஆலோசனை நடத்தினார். மற்ற இரு ஆணையர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஜூலை 3ம் தேதிக்கு மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக அரசுக்கு பின்னடைவு:
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு முதல்வர் கருணாநிதிக்கும், திமுக அரசுக்கும் பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது.
முன்னதாக, மதுரை தேர்தலை தள்ளி வைத்தால், அதைக் கண்டித்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இதேபோல தேர்தலை ஒத்திவைக்க காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மதுரை இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி உண்ணாவிரதமா-பாலு மறுப்பு:
இதற்கிடையே, தேர்தலை தள்ளி வைத்தால் டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக வெளியான செய்தி தவறு, உண்மையற்றது, ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று மறுத்துள்ளார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதி அப்படிக் கூறவே இல்லை. அதுபோல வெளியான செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்றார் பாலு.
நாளை மதுரையில் கருணாநிதி பிரசாரம்:
இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து நாளை மதுரை மேற்கு தொகுதியில் முதல்வர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அங்கு செல்லூர் 60 அடி சாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சர் ஸ்டாலின் மதுரையில் 2 நாட்கள் தங்கி பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
இங்கு ஏற்கனவே மத்திய அமைச்சர் வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர்கள்,எம்பி கனிமொழி மற்றும் நடிகர் பாக்யராஜ் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது உறுதியானால் கருணாதியின் பிரச்சார திட்டத்திலும் மாறுதல் இருக்கலாம்.












Click it and Unblock the Notifications