திமுக அரசின் சாதனைகளைஎடை போடும் தேர்தல்: கருணாநிதி
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், ஓராண்டு காலம் திமுக அரசு செய்த சாதனைகளை எடை போடும் தேர்தலாக அமையும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.எஸ்.கே. ராஜேந்திரனை ஆதரித்து முதல்வர் கருணாநிதி நேற்று மதுரை செல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி, மாநில தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மு.க.அழகிரி முன்னிலை வகிக்க, மாவட் திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்க, நடந்த இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது
கடந்த 17ம் தேதியன்று நெல்லை சென்ற நான் அடுத்த நாள் எனக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லாத போதிலும் கூட இங்கு வந்து பேச முடியவில்லை. காரணம் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. தேர்தல் பிரசாரத்திற்கு முன்னும், பின்னும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்க வேண்டும், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும், அதன் மாண்பை மதிக்க வேண்டும் என்பற்காக நான் மதுரைக்கு வராமல் நேராக சென்னை சென்று விட்டேன். இப்போது நான்கு நாட்கள் கழித்து இங்கு வந்துள்ளேன்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, அதன் கட்டளைகளை நாம் எப்படி மதிக்கிறோம், ஒழுங்காக பின்பற்றுகிறோம், எவ்வளவு செம்மையாக பின்பற்றுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். இதைப் புரிந்து கொள்ளாத சில நண்பர்களும் புரிந்து கொள்ளட்டும் என்பதற்காக சொல்கிறேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் தமிழகத்தில் நடத்தினார்கள் என்பதை அனைவரும் அறிவர். டி.என்.சேஷன் என்று ஒரு தேர்தல் ஆணையர் இருந்தார். அன்றைக்கு தமிழகத்தில் இருந்த அரசு விரோதமாக ஏதோ சொல்லி விட்டார் அல்லது செய்து விட்டார்.
அதற்காக, அதைக் குற்றமாக கருதி, சென்னை விமான நிலையத்திலேய சேஷன் வந்திறங்கியபோது, விமான நிலையத்திலே அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அவர் அந்த அடியை எப்படித் தாங்கியிருப்பார் என்ற வேதனை, சோகம் யாருக்கும் ஏற்படாமல் இருக்க முடியாது.
அத்தோடு விட்டார்களா, பலத்த பாதுகாப்போடு சேஷன் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கும் வந்து விட்டார்கள். அங்கு அந்த ஹோட்டலுக்கு 50, 60 லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் ஹோட்டலில் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்கிற அளவுக்கு சேஷன் படாதபாடு படுத்தப்பட்டார்.
அப்படிப்பட்ட தமிழ்நாட்டில், இன்றைக்கு நாம், தேர்தல் ஆணையத்துடைய சொற்களை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, கட்டளைகளை சிரமேற்தாங்கி, இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யாரை மாற்றச் சொன்னார்களோ அவர்களை மாற்றியுள்ளோம், யாரை ஊரை விட்டுப் போகச் சொன்னார்களோ அவர்களை ஊரை விட்டுப் போகச் சொல்லியுள்ளோம்.
நேற்றைக்கு இங்கு பிரசாரத்திற்கு வந்த ஒரு அம்மையார், தேர்தல் ஆணையத்தை நான் மிரட்டுகிறேன் என்று கூறி விட்டுப் போயிருக்கிறார். யார் தேர்தல் ஆணையரை மிரட்டினார்கள் என்பற்கும், யார் தேர்தல் ஆணையரைத் தாக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் வரலாற்றுப் பூர்வமாக இருக்கிற காரணத்தால், அதைப் பற்றிய சிந்தனையை நான் விட்டு விடுகிறேன்.
அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க சிலர் முயற்சித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கு இடம் தராமல், நம்முடைய அன்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள், தன்னுடைய நிலையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு ஒரு நல்ல காலத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவரை வைத்து நாடகம் ஆடலாம் என்று கருதிவர்களுடைய வேடத்தை இந்த நேரம் பார்த்துக் கலைத்தாரே, அதற்கு எங்களது கூட்டணியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத் தேர்தல் கடந்த ஓராண்டு காலத்தில் நமது அரசு செய்த சாதனைகளின் எடை என்ன, அந்த எடை சரியாக இருக்கிறதா, அதன் தராசு முள் எங்காவது ஒரு பக்கம் சாய்ந்து போய் சரியான எடையைக் காண்பிக்கவில்லையா என்பதை எல்லாம் எங்களுக்கு எடுத்துக் காட்டத்தான், இந்த இடைத் தேர்தல். இது எங்களை எடை போட்டுப் பார்க்கிற தேர்தல் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications