கொழும்பில் கண்ணிவெடி சிக்கியது-300 தமிழர்களை கைது செய்து விசாரணை
கொழும்பு:கொழும்பு நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிட்டங்கி அருகே சக்தி வாய்ந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட தமிழர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு நகரின் கொலன்னவா எண்ணெய் சேமிப்பு கிட்டங்கி அருகே 20 கிலோ எடை கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த கண்ணிவெடியை போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய போலீஸார் 300க்கும் மேற்பட்ட தமிழர்களை விசாரணைக்காக கைது செய்தனர். பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 250 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் ஒபசேகர்புரா என்ற பகுதியில் வசித்து வருபவர்கள்.
இந்த மாதத்தில் கொழும்பில் கண்டுபிடிக்கப்படும் மூன்றாவது கண்ணிவெடி என்பதால் கொழும்பு மக்களிடையே தொடர்ந்து பீதி நிலவுகிறது.
புலிகள் முகாம் மீது குண்டு வீச்சு:
இந்த நிலையில் முல்லைத் தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் இரண்டு முகாம்கள் மீது இலங்கை விமானப்படையினர் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் இது இரண்டாவது தாக்குதல் ஆகும். இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் இரு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்றார்.
இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்த தகவலை ராணுவமோ அல்லது புலிகள் தரப்போ வெளியிடவில்லை.
இன்னொரு சம்பவத்தில், யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications