பல தடைகளை மீறி கிடைத்த வெற்றி-கருணாநிதி
சென்னை:தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பெரிய அசம்பாவிதம் ஏற்படப் போவதாக கிளப்பப்பட்ட செய்திகள் உள்ளிட்ட பல தடைகளை மீறித் தான் மதுரை மேற்குத் தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளருக்கு மக்கள் வெற்றியைக் கொடுத்துள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
இந்த வெற்றியைத் தொடர்ந்து கூட்டணித் தலைவர்கள் அனைவரும் தொடர்பு கொண்டு எனக்குப் பாராட்டு தெரிவித்தனர், வாழ்த்து தெரிவித்தனர் என்றார்.
பின்னர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக சாடினார்.
அதில், இடைத் தேர்தலையொட்டி உயர் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 163 பேரையும், பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோரை மாற்ற வேண்டும். யார் யார் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தொகுதி தேர்தல் அதிகாரியாக யார் இருக்க வேண்டும், மாநகர காவல்துறை ஆணையராக இவரைத்தான் நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. தேர்தல் ஆணையம் விரும்பியதை, அவர்கள் உத்தரவிட்டதை இந்த அரசு நிறைவேற்றியது.
தேர்தல் நாளன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியாக சென்று சோதனை நடத்தினார். ஏதோ பெரிய அசம்பாவிதம் ஏற்படப் போவது போல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன.
இத்தனையையும் மீறி திமுக கூட்டணிக்கு மதுரை மேற்குத் தொகுதி வாக்காளர்கள் வெற்றி தேடித் தந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.
அவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications