தயாநிதியிடமிருந்து கருணாநிதியை காப்பாற்றினேன்-ராமதாஸ்
சென்னை:
தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
கடந்த 40 ஆண்டு காலமாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சியமைத்து தமிழகத்தை சீரழித்து வருகின்றன. இந்த வீட்டில் உட்கார்ந்த காக்காய் கூட அந்த வீட்டில் போய் உட்காரக் கூடாது என்கிற அளவுக்கு சகிப்பு தன்மை இல்லாமல் போய்விட்டது.
சமூகம் பண்பாடு, மொழி என அனைத்தும் சீரழிந்து வருகின்றன.
தற்போது தமிழகத்தில் இளைஞர்களை சினிமா தியேட்டர்களிலும், சாராய கடைகளிலும் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது. இதை மாற்ற பாமக போராடும்.
தேர்தல் என்றாலே காசு கொடுத்து ஓட்டு வாங்கும் வியாபாரமாக வாக்காளர்களை பாழாக்கிவிட்டார்கள். நான் அனைத்து கட்சியினரையும் தான் சொல்கிறேன்.
சொந்த காலில் நிற்கவேண்டும் என தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்களையும் தேர்தல் காலத்தில் காசு கொடுத்து கெடுத்துவிட்டனர். முதலில் ரூ.50, ரூ. 100 என ஆரம்பித்து ரூ.1,000 தொட்டு, இப்போது மிக்ஸி, கிரைண்டர் என வீட்டுக்கு தேவையான பொருட்களை அளிக்கிற அளவிற்கு வாக்காளர்களை மாற்றிவிட்டார்கள். இதன் உச்சக்கட்டம் தான் மதுரை தேர்தல்.
சினிமாக்காரர்கள் தமிழகத்தை எத்தனை கேவலமாக, கீழ்த்தரமாக புரட்டி போட்டியிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ஒரு மாநில முதல்வர் (கருணாநிதி), முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா)முன் கூட்டியே படம் பார்த்து சிவாஜி படத்திற்கு விளம்பர சான்றிதழ் வழங்கிற கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடக்காது.
புதுவை முதல்வரோ ஒருபடி மேலே போய் ஒரு நடிகையோடு சேர்ந்து அந்த திரைப்படத்தின் முதல் சினிமா டிக்கெட் விற்பனையை துவக்கி வைக்கிறார்.
இதே போல் இன்னொரு நடிகருக்கு பிறந்த நாளாம், அதற்காக ஒரு பாண்டிசேரியிலிருந்து சென்னை வரை ஒரு ரசிகன் பின்னோக்கி நடக்கிறானாம், அந்த பயணத்தை புதுவை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சீரழிவின் உச்சகட்டம்தானே இது.
பல மாதங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தில் பாலும், பீரும் வாங்கி நடிகரின் கட் அவுட்டிற்கு ஊற்றுகின்றனர். ரூ.20 விற்க வேண்டிய டிக்கெட் ரூ.1,000 வரை விற்கப்பட்டதாக சொல்கிறார்கள். நடிகர் பின்னால் அலையும் ஒவ்வொரு ரசிகனும் நான் ஒரு முட்டாளுங்க, ஏன்னா நான் ரசிகர் மன்றத்தில் இருக்கேனுங்க என தன் நெற்றியில் எழுதி ஒட்டாத குறையாக அலைகிறான்.
எந்தவிதமான கொள்கைளும் கோட்பாடுகளும் இல்லாத ஒருவர் அரிதாரம் பூசி சினிமாவில் நடித்துவிட்டு, வயதான பிறகு நடிக்க முடியாமல் அரசியலை தொழிலாக செய்யலாம் என வரும் கொடுமையும் தொடர்ந்து வருகிறது.
இந்த நடிகர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது, என்ன வரலாறு இருக்கிறது, மக்களுக்காக என்ன செய்தார்கள். திரைப்படத்தில் இவர்கள் பேசிய வசனங்களுக்கும் கதைகளுக்கும் சமுதாயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.
மத்திய அமைச்சராக இருந்த ஒருவரை (தயாநிதி மாறன்) இப்போது நீக்கியிருக்கிறார்கள். அவரால் வந்த வினைகள் தான் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற திட்டங்கள்.
தயாநிதி மாறன் 140 கிராமங்களோடு 50,000 ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தோடு என்னை வந்து பார்த்தார்.
ஒரு மணி நேரம் அவர் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு, தம்பி இது உங்கள் தாத்தாவிற்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.
ஆனால் அவர் எப்படியோ முதல்வரை நிர்ப்பந்தித்து துணை நகர திட்டத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார். நான் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதன் விளைவாக முதல்வர் அத்திட்டத்தை கைவிட்டார்.
இவ்வாறு அந்த முன்னாள் அமைச்சர் எந்தெந்த விவகாரமான திட்டங்களை கொண்டு வந்தாரோ, அந்த திட்டங்கள் அனைத்தையும் நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது அது கருணாநிதிக்கு மனவேதனையை அளித்திருக்கலாம்.
ஆனால் கருணாநிதியின் குடும்பத்தை குழப்பி அவரது (கருணாநிதியின்) நாற்காலியையே பறிக்கும் திட்டம் அம்பலமானதும் முதல்வர் விழித்துக் கொண்டார்.
அந்த வகையில் நான் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications