மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி: "ஆலு போண்டா" செய்து வென்ற இந்திய பெண்! டேஸ்ட்டில் அசந்த அமெரிக்க நடுவர்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மாஸ்டர் செஃப் எனும் நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த போட்டியாளர் ஐஷு சல்லா என்பவர் தென்தமிழகத்தின் முக்கிய ஸ்னாக்ஸ்ஸான உருளைக் கிழங்கில் ஒரு போண்டா செய்து Immunity round-ல் வெற்றி பெற்ற செய்தி வைரலாகி வருகிறது.
மாஸ்டர் செஃப் யுஎஸ்ஏ சீசன் 16 எனும் நிகழ்ச்சி கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 4 பகுதிகளில் இருந்து 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதாவது அமெரிக்க அணி, ஐரோப்பிய அணி, ஆப்பிரிக்க அணி, ஆசிய பசிபிக் அணி என 4 அணிகளில் இருந்து தலா 5 பேர் வீதம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆசிய பசிபிக் அணியில் ஐஷூ சல்லா என்பவர் கலந்து கொண்டார். இவரது அணியில் சீனா, வியட்நாம், மலேசியா, வங்கதேசம் ஆகிய நாட்டவர்களும் இருந்தனர்.
இந்தப் போட்டியில் பாதுகாப்பு பதக்கம் எனப்படும் இம்யூனிட்டி ரவுண்ட் நடத்தப்பட்டது. பொதுவாக இந்த ரவுண்டில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இம்யூனிட்டி பேன்ட் (Immunity band) கொடுக்கப்படும்.
அப்படியே அடுத்த ரவுண்டில் அவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகையும் வழங்கப்படும். இது அந்த போட்டியாளர் டேஞ்சர் ஜோனுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளும். சில சமயங்களில் எலிமினேட் ஆகாமல் கூட பார்த்துக் கொள்ளும்.
அப்படி ஒரு ரவுண்ட் இந்த சமையல் போட்டியிலும் நடத்தப்பட்டது. அதில் அவரவர் நாட்டில் செய்யப்படும் பிரபல உணவுகளை செய்தனர். அது போல் ஆசிய பசிபிக் அணியை சேர்ந்த ஐஷு சல்லா, உருளைக் கிழங்கு போண்டா செய்து அசத்தினார்.
இத்துடன் மல்லி- புதினா சட்னியையும் செய்து பரிமாறினார். இவரது இந்த ஆலு போண்டா (Aloo Bonda) நடுவர்களால் பாராட்டப்பட்டது. இந்த போண்டாவில் இருந்த பூரணத்தில் உருளைக்கிழங்கு மசாலா, வறுத்த சீரகம், துருவிய தேங்காய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த தென்னிந்திய போண்டாவை செய்து ஐஷு அந்த போட்டியில் இம்யூனிட்டி ரவுன்டில் வெற்றியும் பெற்றார். தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் காரணமாக இந்த தொடர் சில வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய எபிசோடு வரும் ஜூலை 15 ஆம் தேதி அன்று ஃபாக்ஸ் சேனலில் மீண்டும் ஒளிபரப்பாகும். வெளிநாட்டில் போய் நம் தென்னிந்திய உணவை செய்து ஒருவர் வென்றிருக்கிறாரே, அந்த டிஷ்ஷை நாமும் செய்து பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
உருளை மசாலாவுக்கு
உருளைக்கிழங்கு - 2 தோல் நீக்கி வேக வைத்தது
பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய்- 1 நறுக்கியது
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு- தலா அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித் தழை- கொஞ்சம்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
சமையல் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மேல் மாவு செய்ய
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1 சிட்டிகை (optional)
உப்பு, தண்ணீர்- தேவையான அளவு
எண்ணெய் - போண்டா பொரிக்க தேவையானது
செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்
அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த கலவை ஆறியதும், சிறிய எலுமிச்சை பழ சைஸில் உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய்யை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் உருளைக்கிழங்கு கலவையை மாவில் முக்கி எண்ணெய் எடுத்து போட வேண்டும். மிதமான தீயில் வைத்து போண்டாக்கள் பொன்னிறமாக வரும் வரை பொறித்தெடுக்க வேண்டும்.
இதற்கு புதினா, தேங்காய் சேர்த்து வைத்தால் சுவையாக இருக்கும்.














Click it and Unblock the Notifications