பல கோடி ரூபாய் சொகுசு கார்.. ஒரு சின்ன தவறால் அப்பளம் போல நொறுங்கிடுச்சு! பரபரப்பு
ஹைதராபாத்: பல கோடி மதிப்புள்ள காரை வாங்குவோர் அதை பார்த்து பார்த்து வைத்துக் கொள்வார்கள். ஆனால், இங்கு ஒருவர் செய்த சிறு தவறால் சொகுசு கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் யாருக்கும் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என்றாலும் அந்த சொகுசு கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது
ஹைதராபாத் பிலிம் நகர் பகுதியில் உள்ள ஹில் வியூ அபார்ட்மென்ட்டின் பிரதான நுழைவாயிலில் அதிவேகமாக வந்த ஃபெராரி சொகுசு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்துள்ளது.

சேதம்
இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி கார் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும், அபார்ட்மென்ட்டின் பிரதான கேட் மற்றும் சுற்றுப்புற கட்டமைப்புகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிலிம் நகர் பகுதியில் ரோடு நம்பர் 5 பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஃபெராரி கார் ரோமா மாடல் என தெரிய வந்துள்ளது கார் என தெரிகிறது" என்றார். இந்திய சந்தையில் இந்த காரின் மதிப்பு ரூ.3.5 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையுயர்ந்த கார் தான் விபத்தில் சிக்கியுள்ளது.
அதிக வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக அபார்ட்மென்ட்டின் பிரதான வாயிலில் மோதி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மோதலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் கார் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தால் அபார்ட்மென்ட்டின் கேட் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
விபத்து
விபத்து நடந்த உடனேயே காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் காரை ஓட்டி வந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த சொகுசு கார் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மது போதை?
முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டியவர் மது அருந்தியிருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இருப்பினும், அவர்களிடம் ரத்த பரிசோதனை செய்தால் மட்டுமே இது உறுதியாகும். சிசிடிவி காட்சிகள், வாகனப் பதிவு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விபத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. இருப்பினும், எல்லா நேரங்களிலும் இதுபோல இருக்கும் என சொல்ல முடியாது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது விபத்து
கடந்த ஒரு வாரத்திற்குள் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது வாகன விபத்து இதுவாகும். இதற்கு முன்பு, ஜூலை 9ம் தேதி இரவு டோலிவுட் நடிகர் தர்மாவின் வீட்டின் சுவரில் எஸ்யூவி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.. அந்த விபத்தில் கார் ஓட்டிய நபர் மது போதையில் இருந்தது போலீஸ் சோதனையில் உறுதியானது.
ஹைதராபாத்தில் கடந்த சில காலமாகவே இதுபோல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் சொகுசு கார்களை அதிவேகமாக இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால் போலீசார் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
