அதிமுக கவுன்சிலர் விரட்டி விரட்டிக் கொலை
சென்னை:
சிவகங்கை திமுக நகராட்சித் தலைவர் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட பயங்கரம் இன்னும் மறைவதற்குள், சென்னை அருகே அதிமுக கவுன்சிலர் ஒருவர் விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள திருநின்றவூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த முருகன். நேற்று காலை கறிக் கடைக்கு தனது நண்பர் செல்வராஜுடன் சென்ற முருகன், கறி வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கோமதிபுரம்-திருநின்றவூர் சாலை சந்திப்பில் நான்கு பேர் கொண்ட கும்பல் முருகனையும், செல்வராஜையும் மறித்து நிறுத்தியது. பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அக்கும்பலிடமிருந்து தப்பி செல்வராஜ் ஓடினார்.
வெட்டுக் காயமடைந்த முருகனும் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அவரை துரத்திச் சென்ற கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்துக் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். கடந்த ஆண்டுதான் முருகன் கோஷ்டியினரால், செவ்வாய்ப்பேட்டை ஊராட்சித் தலைவர் சேட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்.
முருகனுடன் தொடர்பு வைத்திருந்த நிர்மலா என்ற பெண்ணுடன், சேட்டுவும் தொடர்பு வைத்திருந்தாராம். இதை அறிந்த முருகன், சேட்டுவை ஆள் வைத்து வெட்டிக் கொன்றாராம்.
எனவே முருகனை, சேட்டுவின் ஆட்கள்தான் கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முருகனை கொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால் அதில் காயத்துடன் தப்பினார் முருகன். இந்த நிலையில் 2வது முயற்சியில் உயிரிழந்து விட்டார்.
ஜெயலலிதா கண்டனம்
முருகன் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications