எனது மகன் அப்பாவி-ஹனீப் தாயார் வேதனை
பெங்களூர்:எனது மகன் முகம்மது ஹனீப் அப்பாவி. அவனுக்கும், லண்டன், கிளாஸ்கோ தீவிரவாத செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்பின் தாயார் குர்ரத்துலான் கூறியுள்ளார்.
பெங்களூர் பில்லன்னா கார்டனில் உள்ள டாக்டர் ஹனீப்பின் வீடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஹனீப்பின் தாயார் குர்ரத்துலான், சகோதரி சுமையா உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
![]() |
தனது மகன் குறித்து குர்ரத்துலான் கூறுகையில், எனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவன் அப்பாவி. அவன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று அல்லாவைப் பிரார்த்துக் கொண்டுள்ளேன் என்றார்.
சுமய்யா கூறுகையில், எனது சகோதரருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நாங்கள் ஏற்கவே முடியாது. அவர் அப்படிப்பட்டவர் இல்லை.
மிகவும் புத்திசாலியான எனது சகோதர் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர். குடும்பப் பாசத்தை மட்டுமே அவர் அறிந்தவர். அவருக்கு நண்பர்கள் கூட அதிகம் கிடையாது. அம்மா மீதும் சகோதர, சகோதரிகள் மீதும் அதிக பாசத்துடன் இருந்தவர்.
படிப்பில் அவர் பல சாதனைகளைச் செய்துள்ளார். சிறந்து விளங்கினார். அவர் மீது இதுவரை ஒரு புகார் கூட எழுப்பப்பட்டதில்லை. கடவுளுக்குப் பயந்து நடப்பவர். தினசரி ஐந்து முறை நமாஸ் செய்தும், ரம்ஜான் மாதங்களின்போது விரதம் இருந்தும், மற்ற எல்லா இந்திய முஸ்லீம்களையும் போலவே இவரும் ஆண்டவனை வணங்கி வந்தார்.
மற்ற மதத்தினர் மீது ஒருபோதும் துவேஷம் காட்டியதில்லை, அவர்கள் மீது ஆவேசப்பட்டதில்லை, பொறாமைப்பட்டதில்லை என்றார்.
ஹனீப் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹனீப் இந்த வாரம் பெங்களூர் வருவதாக இருந்தது. அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் பெங்களூர் வரவுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்லுமாறும் அவர் தனது சகோதரருக்கு போன் செய்து கூறியிருந்தார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றார்.
இதற்கிடையே, கர்நாடக போலீஸார் ஹனீப் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். ஹனீப்பின் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் மற்றும் சகோதரி, சகோதரர்களுடன் பேசி தகவல் சேகரித்தனர்.
அதேபோல ஆஸ்திரேலிய தூதரகமும், ஹனீப் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.













Click it and Unblock the Notifications