டிக்கெட் முன்பதிவு-ரயில்வே திடீர் பல்டி;90 நாள் அவகாசம் 60 ஆக சுருங்கியது
சென்னை:90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்த ரயில்வே, அதை ரத்து செய்து விட்டு, பழையபடி 60 நாட்களாக அதை சுருக்கி விட்டது.
தொலைதூர ரயில்களில் செல்வோர் தங்களுக்கான பயண டிக்கெட்டுக்களை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளும் முறை முன்பு அமலில் இருந்தது. அதை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 90 நாட்களாக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதன் மூலம் தாங்கள் போக வேண்டிய ரயில்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுக்களை புக் செய்து கொள்ளும் வசதியை பயணிகள் பெற்றனர். இதன் மூலம் பயணிக்கு பெரும் பலன் கிடைத்தது. அவசரம் அவசரமாக முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் நீங்கி, நிதானமாக புக் செய்யும் வசதியும் பயணிகளுக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது 3 மாத முன்பதிவு காலம் என்று உள்ள முறையை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. பழையபடி 2 மாதங்கள் என்ற முறைக்கு ரயில்வே மாறப் போகிறது. ஜூலை 15ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
ரயில்வேயின் இந்தத் திடீர் மாற்றத்துக்கு முக்கிய காரணமாக, 90 நாள் முன்பதிவு முறையால் எதிர்பார்த்த அளவுக்கு ரயில்வேக்கு லாபம் கிடைக்கவில்லையாம். இதனால்தான் பழைய முறைக்கு மாற ரயில்வே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல், தனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ரயில்வே எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications