பி.இ. படிப்பவர்கள் எம்.பி.பி.எஸ் சேரமுடியாது-உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பி.இ உள்ளிட்ட பிற தொழில் படிப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மரிய அருள் ரெக்ஸ் உள்ளிட்ட சில மாணவர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், பழைய பிளஸ் டூ பாடத் திட்டம் மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் புதிய பாடத் திட்டம் கடினமாக உள்ளது.

இந்த நிலையில் இரு பாடத் திட்டங்களின் கீழும் படித்துத் தேறியவர்களை இணைத்து ஒரே ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது தவறு. எனவே இந்த ரேங்க் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தக் கூடாது என்று கோரியிருந்தனர்.

மரிய அருள் ரெக்ஸ் தாக்கல் செய்த இன்னொரு மனுவில், கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத பலர் பி.இ. போன்ற பிற தொழில் படிப்புகளில் சேர்ந்து படித்தனர். அவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு தேறிய மாணவர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. இதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஒரு நாள் மட்டும் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தத் தடை விதித்தது. பின்னர் நேற்று பிற்பகல் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மாலையில் இறுதித் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் பிறப்பித்த இறுதித் தீர்ப்பில், முன்னதாக உள்ள வருடங்களில் ஏதாவது ஒரு தொழிற் படிப்பில் சேர்ந்து படித்து வருபவர்கள், அதில் சேர்ந்து பாதியில் கைவிட்டவர்கள் இந்த ஆண்டுக்கான மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது.

அவ்வாறான மாணவர்கள் அந்தப் படிப்பிலிருந்து விலகி வருவதால், கல்வியைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய இடமும் வீணாகும் என்பதால், சமுதாயத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

அரசு பிறப்பித்துள்ள 6ஏ(2) பிரிவின்படி, மருத்துவம் தவிர பிற தொழிற் படிப்புகளில் படித்து வரும் மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை ஏற்க முடியாது.

கடந்த ஆண்டு உள்ள விதிமுறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறும் என தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். தேர்வுக் கமிட்டியானது கடந்த ஆண்டு கடைப்பிடித்த விதிமுறையை இந்த ஆண்டும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், கடந்த ஆண்டு வேறு படிப்புகளில் சேர்ந்து விட்டு இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருவதற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வந்த மாணவ, மாணவியர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவுன்சிலிங்குக்காக இவர்கள் நேற்று மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் காத்திருந்தனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பை அறிந்ததும் இவர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பலருக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் 300 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து நேற்று கவுன்சிலிங் நடக்கவில்லை என்பதால், நேற்று கலந்து கொள்ள முடியாதவர்கள் வசதிக்காக இன்று காலை 8 மணிக்கே கவுன்சிலிங் தொடங்கி விட்டது. நேற்று வராதவர்கள் இன்று காலை முதல் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+