நக்சலைட் சந்திரா சுந்தரமூர்த்தி எங்கே?
சென்னை: கைதாகியுள்ள நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தியின் மனைவி சந்திராவைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 1968ம் ஆண்டு தமிழகத்தின் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட் இயக்கத்தின் செயல்பாடு தொடங்கியது.
மேற்கு மாவட்டங்களில் மட்டுமே இருந்து வந்த நக்சலைட்டுகள் முதல் முறையாக தென் மாவட்டங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியமலை வனப் பகுதியை தங்களது ஆயுதப் பயிற்சிக்கு ஏற்றதாக தேர்வு செய்து பயிற்சியிலும் ஈடுபடத் தொடங்கினர்.
![]() |
ஆனால் உஷாராக இருந்த பொதுமக்களின் புத்திசாலித்தனமான தகவலால் போலீஸார் விரைந்து செயல்பட்டு முளையிலேயே இந்த நக்சல் இயக்கத்தை முடக்கிப் போட்டுள்ளனர். பெரியகுளம், முருகமலை காட்டுக்குள் பிடிபட்ட 3 பேர் கொடுத்த தகவலின் மூலம் சுந்தரமூர்த்தி என்ற பெரிய விலாங்கு மீனைப் பிடித்துள்ளனர்.
சுந்தரமூர்த்தி கடந்த 15 ஆண்டுளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வந்த பிரபல நக்சலைட். இவரது மனைவி சந்திரா. இவரும் ஒரு நக்சலைட்தான். சந்திரா சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் ஆவார்.
தர்மபுரி வனப் பகுதியில் அல்லது சேலம் மலைப் பகுதியில் சந்திரா பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரைப் பிடிக்க தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சந்திரா, சுந்தரமூர்த்தியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். சுந்தரமூர்த்தியின் துணிச்சலான பேச்சு, செயல்பாடுகள் கவரவே காதலில் வீழ்ந்தார். நக்சலைட்டாக தானும் மாறினார்.
![]() |
இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. நக்சல்பாரி இயக்கத்தில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதி இருப்பதால் சுந்தரமூர்த்தி, சந்திராவும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டுப் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஆயுதப் பயிற்சியில் சந்திரா உள்ளிட்ட பல பெண்கள் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் போலீஸார் அவர்களை கைது செய்தபோது பலர் தப்பித்து சென்று விட்டனர். அதில் சந்திராவும் ஒருவர்.
கடந்த 5 வருடமாக தலைமறைவாக இருந்து வருகிறார் சந்திரா. நக்ஸலைட்டுகள் எப்போதுமே ஒன்றாக தங்குவதில்லை. போலீஸாரிடம் மொத்தமாக சிக்காமல் இருக்க இவர்கள் செய்யும் தந்திரம் இது. ஒரே ஊரிலிருந்தாலும் கூட தனித்தனியாகத்தான் தங்குவார்கள்.
முருகமலைப் பகுதியில் சிக்கிய 3 நக்ஸலைட்டுகளுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 பேர் தப்பிவிட்டனர். இவர்களில் சேகர், சுரேஷ், ரஞ்சித் ஆகிய 3 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுந்தரமூர்த்தி பிடிபட்டுள்ளதால் அவரது இடத்தில் இருந்து நக்சலைட் இயக்கத்தை வழி நடத்திச் செல்ல சந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே சந்திராவைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கண்ணிவெடியில் நான் பெஸ்ட்! சுந்தரமூர்த்தி:
இந்நிலையில் 15 வருடங்களுக்கு பிறகு பிடிப்பட்டுள்ள நக்ஸல் தலைவன் சுந்தரமூர்த்தி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், கண்ணிவெடி தயாரிப்பதில் நான் சூப்பர் எனத் தெரிவித்துள்ளான்.
திருப்பூர் அருகே பிச்சம்பாளையம் புதூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நக்சல் தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்து சென்னைக்கு விசாரணைக்காக கொண்டு வந்தனர்.
இதில் சுந்தரமூர்த்தி மற்றும் அவன் மனைவி மீது ஏற்கனவே ஊத்தங்கரையில் ஆயுதபயிற்சி எடுத்த வழக்கு உட்பட 10 வழக்குகள் இருக்கிறது. இதில் ஆயுதப்பயிற்சி கொடுத்ததற்காக சுந்தரமூர்த்தி மற்றும் தலைமறைவாக இருக்கும் அவன் மனைவியையும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய கோர்ட் பிடிவாரண்ட் போட்டது.
இதனால் இப்போது கைதான சுந்தரமூர்த்தி அந்த வழக்கின் கீழ் பொடா சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மற்ற 2 பேரும் பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கியூ பிரிவைச் சேர்ந்த ஐ.ஜி.ஜாபர் சேட் மற்றும் டி.ஐ.ஜி. விஸ்வநாதன் முன்னிலையில் நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தியிடம் விசாரணை நடந்தது.
சுந்தரமூர்த்தி போலீஸூக்கு கொடுத்த வாக்குமூலத்தில்,
எனது இயக்கத்தைச் சேர்ந்த காளிமுத்து, சேகர் மற்றும் நவீன் ஆகியோர் ஆந்திராவில் உள்ள மாவோயிஸ்ட் குழுவினரிடம் வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சியை பெற்றுள்ளனர்.
மாவோயிஸ்ட்-களிடமிருந்து நான் மட்டும் கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதில் பயிற்சி பெற்று பெஸ்ட் என பெயர் பெற்றேன். ஆனால் கண்ணிவெடிகளை வெடிக்க வைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை.
நாங்கள் கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு ஆயுதப்பயிற்சி அளித்தோம். அவர்கள் எங்கள் இயக்கத்தில் இப்போது இல்லை.
வெடிகுண்டு தயார் செய்ய தேவையான வெடிமருந்துகளை கர்நாடகத்தில் உள்ள கல்குவாரி நடத்துபவர்களிடம் வாங்கினோம். இதற்கிடையில் போலீஸார் தேட ஆரம்பித்ததும் திருப்பூரில் பனியன் பேக்டரியில் வேலை பார்த்துக் கொண்டே இயக்கத்தை வளர்த்தேன்.
இதில் என் மனைவி பெண்களையும் சேர்த்து கொண்டு தனியாக இயக்கத்தை நடத்துகிறாள். என்னை கைது செய்தாலும் என் பணியை என்னுடைய மனைவி தொடருவார் என போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
மேலும் யார் யாரிடம் வெடிமருந்து வாங்கினேன் என்ற லிஸ்ட்டை சுந்தரமூர்த்தை தெரிவித்துள்ளதையடுத்து, கல்குவாரி நடத்துபவர்களை தேடி போலீஸார் கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்.
சுந்தரமூர்த்தியை விடுதலை செய்யக்கோரி ஹேபியஸ் கார்ஸ் மனு:
கைது செய்யப்பட்ட 3 நக்சல்களும் சட்டப்படி திருப்பூர் நீதிமன்றத்தில் தான் ஆஜர் படுத்தப்பட வேண்டும். ஆனால் போலீஸார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்திய பின்பு, சென்னை கோர்ட்டில் ஆஜர் படுத்தியது செல்லாது எனவும், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் நக்சல்களின் வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்ட நக்சல்கள் பற்றி முழுத்தகவல்களுடன் வரும் வெள்ளியன்று பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications