விடுவிக்கப்படுகிறார் டாக்டர் ஹனீப்?:ஆஸ்திரேலிய போலீசுக்கு ஆதாரம் சிக்கவில்லை!
கான்பெரா:கடந்த 11 நாட்களாக ஆஸ்திரேலிய போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ள பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்புக்கு எதிராக இதுவரை எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்பதால் அவர் இன்னும் 12 மணி நேரத்தில் விடுவிக்கப்படக் கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
லண்டனில் 2 கார் குண்டுகள் சிக்கியது, கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் ஆகியவை தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டு 11 நாட்கள் ஆகின்றன. அவரை இருமுறை காவல் நீட்டிப்பில் எடுத்த ஆஸ்திரேலிய போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ஹனீப்புக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட சிக்கவில்லை.
![]() |
இதையடுத்து அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலை நீட்டிக்கும் திட்டத்தை ஆஸ்திரேலிய காவல்துறை கைவிட்டு விட்டது. இதைத் தொடர்ந்து இன்னும் 12 மணி நேரம் வரை மட்டுமே ஹனீப்பை ஆஸ்திரேலிய போலீஸார் தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.
அதற்குள் ஹனீப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும். ஆனால் இதுவரை ஹனீப்புக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காவல் நீட்டிப்பு மனுவை ஆஸ்திரேலிய காவல்துறை கைவிட்டுள்ளது. இருப்பினும் அவரை இன்னும் 12 மணி நேரம் வரை விசாரணைக்குட்படுத்த முடியும். அதில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.
ஆஸ்திரேலிய நாட்டின் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரம் போலீஸார் தங்களது காவலில் வைத்து விசாரிக்க முடியும். காவல் நீட்டிப்பு முடிவை போலீஸார் கைவிட்டு விட்ட பின்னர் 12 மணி நேரம் கழிந்து விட்டது.
எனவே இன்னும் 12 மணி நேரம் வரை மட்டுமே ஹனீப்பை தங்களது கஸ்டடியில் போலீஸார் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனீப்புக்கு எதிராக எந்த ஆதாரம் கிடைக்கவில்லை என்ற போதிலும், சந்தேகப்படும் நபர்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீஸார் நம்புவதால்தான் ஹனீப்பை இன்னும் விடுவிக்காமல் உள்ளதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஹனீப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள், வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்லனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசுக்கும் அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
ஹனீப் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறுகையில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் முகம்மது ஹனீப்பை போலீஸ் காவலில் வைத்திருப்பதில் எந்த சிரமமும், சிக்கலும் இல்லை.
சட்டப்படி போலீஸார் செயல்பட காவலதுறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தீவிரவாதம் நுழைய அனுமதிக்க முடியாது என்றார்.
இங்கிலாந்து தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஹனீப் உள்பட ஆறு இந்திய டாக்டர்களை பிடித்து ஆஸ்திரேலிய போலீஸார் விசாரித்தனர். ஆனால் இவர்களுக்கு எதிராக ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஹனீப்பைத் தவிர மற்ற ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
ஹனீப் மட்டும் தொடர்ந்து போலீஸ் பிடியில் உள்ளார். அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் போலீஸார் தோல்வியுற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications