பி.இ. மாணவர் சேர்க்கை: அரசின் அவசரசட்டம் செல்லாது-உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:பொறியில் படிப்புக்கான தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு தொழிற் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், சிறுபான்மையினர் அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடத்தையும், சிறுபான்மை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 50 சதவீத இடத்தையும் அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் சீட்களை ஒற்றைச் சாளர முறையில்தான் நிரப்ப வேண்டும், பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சுயநிதி பொறியில் கல்லூரி கூட்டமைப்பு மற்றும் சில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தனபாலன், தமிழக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தின் 4(1), 5(4) ஆகிய பிரிவுகள் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
இந்த சட்டப் பிரிவுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. எனவே இந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் சீட்களை ஒற்றைச் சாளர முறையில்தான் நிரப்ப வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது.
மாணவர் இடங்களை அரசிடம் ஒப்படைப்பது தொடர்பாக கடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டுக்கும் அதை நிறைவேற்ற வேண்டும் என அரசு வலியுறுத்த முடியாது. இரு தரப்பினரும் சமரச உடன்பாட்டின் அடிப்படையில்தான் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே 65 மற்றும் 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதுதொடர்பாக நீதிபதி தனபாலன் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
வருகிற 18ம் தேதி கவுன்சிலிங் தொடங்கவுள்ளதால் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையை இந்த ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களை பன்முக சாளர அடிப்படையில் நேர்மையாகவும், வெளிப்படையகாவும், சுரண்டல்கள் எதுவும் இல்லாமலும் நிரப்ப வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம், ரேங்க் எண், கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டிக்குத் தர வேண்டும். கட்டணத்தைப் பொறுத்தவரையில் அரசு நியமித்த கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications