விசா ரத்தை எதிர்த்து ஹனீப் அப்பீல்:மனைவியின் விசாவும் ரத்து
மெல்போர்ன்:தனது விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து டாக்டர் முகம்மது ஹனீப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹனீப்பின் மனைவி பிர்தோஸின் விசாவையும் ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப், இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்ளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என்ற சூழ்நிலை உருவானது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்ததாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்தது ஆஸ்திரேலிய போலீஸ். இந்த வழக்கில் ஹனீப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஹனீப்பின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு, அவரை குடியேற்ற காவல் மையத்தில் காவலில் வைத்தது.
ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு இந்திய அரசு மற்றும பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ெதரிவித்தன.
இந்த நிலையில், ஹனீப்பின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ நீதிமன்றத்தில் மேல் முறையடு செய்துள்ளார்.
பிரிஸ்பேனில் உள்ள நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம் என்று பீட்டர் ருஸ்ஸோ கூறியுள்ளார்.
மனைவியின் விசாவும் ரத்து:
இதற்கிடையே, ஹனீப்பின் மனைவி பிர்தோஸ் அர்ஷியாவின் விசாவையும் ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான தகவலை பிர்தோஸுக்கு நேற்று ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து பிர்தோஸ் கூறுகையில், எனது விசாவைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனது ஒரே கவலை, எனது கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கிலிருந்து அவர் விடுதலையாகி பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பது மட்டுமே.
நான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பவில்லை. எனது சகோதரருக்கு விசா கிடைத்தால் அவர் செல்வார் என்றார்.
ஹனீப் கெளரவம்: மன்மோகன் கோரிக்கை
இதற்கிடையே, டெல்லியில் தனது இல்லத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இன்று பேசிய பிரதமர் மன்மோகன் சிங், டாக்டர் முகம்மது ஹனீப்பின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அதற்கான வசதிகள் அவருக்கு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
இந்தியா தொடர்ந்து ஆஸ்திரேலிய நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளது. ஹனீப் குடும்பத்திற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரும், இங்குள்ள வெளியுறவு அமைச்சகமும் தொடர்ந்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.
நேற்று மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் மெக்கார்த்தியை வரவழைத்து நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தும் ஹனீப்பை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தது.
ஏற்கனவே ஹனீப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என இந்தியா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதது.
ஹனீப்புக்கு தனிமைச் சிறை:
இதற்கிடையே, டாக்டர் ஹனீப்பை தீவிரவாதி என்ற அந்தஸ்தில் ஆஸ்திரேலிய அரசு தற்போது வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டால், அவர்கள் ஒரு நாளைக்கு 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது ஹனீப்பும் 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூர் போலீஸார், கபீல் அகமது குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர் ஒரு இன்டர்நெட் பிரியர். தினசரி 10 மணி நேரம் வரை அவர் பிரவுசிங் செய்வது வழக்கமாம்.
ஜிஹாத் குறித்தும், குண்டு தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்தும் உள்ள இணையதளங்களையே அவர் அதிகம் பார்ப்பாராம்.
அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து கைப்பற்றப்பட்ட 320 ஜிபி ஹார்ட் டிஸ்க்கை ஆய்வுக்காக ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பெங்களூர் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை.
கபீல் அகமதுவின் இன்டர்நெட் மோகம் குறித்து அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இரவெல்லாம் கம்ப்யூட்டர் முன்பே இருப்பாராம் கபீல் அகமது.
கிளாஸ்கோ விமான நிலையத்தில் மோதிய ஜீப்பை கபீல்தான் ஓட்டிச் சென்றார். தற்போது 90 சதவீத தீக்காயத்துடன் கபீல், உயிருக்குப் போராடி வருகிறார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications