மேட்டூர் அணை திறப்பு-நீர் மட்டம் 107 அடியானது
சென்னை:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியைத் தாண்டியதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக அணை இன்று மாலை திறக்கப்பட்டது.
பாசனத்திற்காக வரும் 25ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால், கர்நாடகத்தில் கன மழை காரணமாக காவிரியில் நீர் வரத்து பல மடங்கு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104 அடியைத் தாண்டியது.
இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 107.97 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
![]() |
இதையடுத்து முன்கூட்டியே அணையைத் திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள நீர் தேக்கங்கள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையடுத்து நீர்வரத்தை முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆய்வு செய்து, இன்று (ஜூலை 18) மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை அணை திறந்துவிடப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 86 ஆயிரத்து 418 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீர் கல்லணைக்கு செல்கிறது. 3 நாட்களில் கல்லணையை அது அடையும். அதன் பின்னர் கல்லணை வருகிற 21ம் தேதி திறக்கப்படுகிறது.
அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்த விடப்படும்.
மேட்டூர் அணையின் நீர் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
இந் நிலையில் இன்று கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 62,287 கன அடி நீரும், கபினியில் இருந்து 53,067 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் 20ம் தேதி மேட்டூரை வந்தடையவுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை தமிழகத்துக்கு கர்நாடகம் 7 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
