தெரிந்தும் தெரியாமலும்..அறிந்தும் அறியாமலும்

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே. கான்

ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் எதிர்காலத்தில் அந்தக் கட்சி விஜய்காந்துடன் கூட்டணி அமைப்பதை தடுக்க முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருதுகிறார்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தமிழகத்தில் ஏதாவது கட்சியின் மீது சவாரி செய்தே ஆக வேண்டிய நிலை. திமுக முதுகில் காங்கிரஸ் ஏறி அமர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி-திமுக தலைவர் கருணாநிதி இடையே நல்ல ஒற்றுமையும் ஒத்துழைப்பும் நிலவுவதால் இப்போதைக்கு, குறைந்தபட்சம் அடுத்த தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் வரை, இந்த சவாரியில் பிரச்சனை ஏதும் இருக்கப் போவதில்லை.

ஆனால், ஜெயலலிதாவுக்குத் தான் பிரச்சனை. நெடுங்காலமாக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பலன் பெற்றவர் ஜெயலலிதா. ஆனால், ஆட்சியில் அமர்ந்தவுடன் தான் பதவிக்கு வர உதவியவர்களை தூக்கி வீசுவதில் எக்ஸ்பர்ட். அந்த வகையில் காங்கிரஸை ரொம்பவே நோகடித்துவிட்டார். இதனால் ஜெயலலிதாவை நம்பி திமுகவை இப்போதைக்கு காங்கிரஸ் கைவிடப் போவதில்லை.

அதே நேரத்தில் ஏகப்பட்ட கோர்ட் கேஸ், வருமான வரி வழக்குகள் என எதிலும் சிக்கல் நிறைந்த ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் அரசியல் பாதுகாப்பு தேவை. அதற்காகத் தான் முன்னாள்களை எல்லாம் ஒன்று திரட்டி மூன்றாவது அணியை உருவாக்கினார். இதில் கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்க்க தீவிரம் காட்டினார்.

எப்படியாவது அதிமுக முதுகில் சவாரி செய்துவிடலாம் என காத்திருந்த பாஜகவுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்துவிட்டது. இதனால் வேகமாய் காய் நகர்த்திய பாஜக ஜெயலலிதாவுக்கு கவுண்டர்-அதிர்ச்சி தரும் வகையில் விஜய்காந்த்தை வளைக்க முயன்று வருகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் விசுவரூபம் எடுத்து வரும் விஜய்காந்தைப் பார்த்து அதிர்ந்து போய் இருக்கின்றன திமுகவும், அதிமுகவும். பாமக ஏற்கனவே பாடம் கற்றுவிட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமக பல இடங்களில் தோல்வியைத் தழுவ காரணமாக இருந்தவர் விஜய்காந்த்.

அதே போல தமிழகம் முழுக்கவும் அதிமுகவின் பின்னடைவுக்கு தேமுதிக தான் காரணமாக இருந்தது. வழக்கமாக நகர்ப் பகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு எப்போதும் அதிகம். அதே போல படிக்காத, ஏழை, கிராமப் பகுதி மக்களிடையே அதிமுகவுக்கு ஆதரவு அதிகம்.

இதில் அதிமுகவின் ஓட்டு வங்கியை விஜய்காந்த் மிக எளிதாகவே தட்டிப் பறிக்க ஆரம்பித்துவிட்டார். நகர்ப்புற, படித்தவர்கள் மத்தியில் திராவிட கட்சிகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தையும் விஜய்காந்த் சரியாக பயன்படுத்தி வருகிறார். இதனால் திமுகவும் விஜய்காந்திடம் ஓரளவுக்கு செல்வாக்கை இழந்து வருவதும் உண்மை.

சினிமாவையே (எம்ஜிஆர், ஜெயலலிதா) அடிப்படையாக வைத்து வளர்ந்த அதிமுகவை அதே சினிமா, விஜய்காந்த் ரூபத்தில் மிக வேகமாக சுரண்டி எடுத்து வருகிறது. இதனால் அதிமுக ஓட்டு வங்கி ரொம்ப வேகமாகவே கரைந்து கொண்டிருக்கிறது. இதை கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்த இரு இடைத் தேர்தல்களும் நிரூபித்துவிட்டன.

விஜய்காந்தின் இந்த அசுர வளர்ச்சியை காங்கிரசும் பாஜகவும் கவனிக்கத் தவறவில்லை. திமுக ரொம்ப அலட்டினால் விஜய்காந்துடன் கைகோர்க்க காங்கிரஸ் எப்போதும் தயாராகவே உள்ளது. விஜய்காந்தும் அதற்குத் தயார் தான். இதனால் தான் காங்கிரஸ் மனம் நோகாமல் நடந்து கொள்கிறது திமுக.

அதே நேரத்தில் பாஜகவை இதுவரை ஒதுக்கியே வைத்திருந்தார் விஜய்காந்த். அந்தக் கட்சியோடு கூட்டணி சேர்வதால் தனக்கு ஒரு லாபமும் இல்லை என்பதே அதற்குக் காரணம். இதனால் அந்தக் கட்சியினரை சந்திப்பதைக் கூட தவிர்த்து வந்தார். ஆனால், ஜனாதிபதி தேர்தலை முன் வைத்து அவருடன் நட்புக்கு பாலம் போட்டுவிட்டது பாஜக.

3வது அணி என்று போய்விட்ட அதிமுக தன்னை இனி ஏற்காது என்று கருதிய பாஜக படு லாவகமாக நகர்த்திய காய் இது. விஜய்காந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்திப்பதற்கு முன், டெல்லியில் இருந்து பல மூத்த பாஜக தலைவர்கள் விஜய்காந்துடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். அதன் பின்னரே அந்த சந்திப்புக்கு விஜய்காந்த் முன் வந்தார் என்கின்றனர்.

அதிமுக, திமுகவைப் போல பண பலம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த். இதனால் தான் அவரே விரும்பாவிட்டாலும் வசதி படைத்தவர்களைத் தேர்வு செய்து முக்கிய பதவிகள் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதன் மூலம் கட்சியை நடத்தும் செலவை சமாளித்து வருகிறார். கட்சிக்காக தனது பல சொத்துக்களை விற்றும் விட்டார்.

இந் நிலையில் வரப் போகும் மக்களவை, சட்டமன்ற தேர்தல்களை சமாளிக்க விஜய்காந்த்துக்கு கூட்டணி தேவையோ இல்லையோ எல்லா வசதியும் கொண்ட ஒரு கட்சி வேண்டும். அது தான் பாஜக ரூபத்தில் விஜய்காந்தை தேடி வந்துள்ளது.

திமுக, அதிமுக என இரண்டுமே திராவிடக் கட்சிகள் தான் என்றாலும் பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரத்தை அனுபவித்தவை. அதே நிலைக்கு விஜய்காந்தும் தள்ளப்பட்டு வருகிறார்.

அவருக்கு காங்கிரசுடன் தான் கூட்டு சேர அதிக விருப்பம். ஆனால், அந்த வாய்ப்பை கருணாநிதியின் அரசியல் சாண்கியத்தனம் தரவில்லை. அதே நேரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் தலைவியான ஜெயலலிதாவின் அவசர அரசியலால் விஜய்காந்துக்கு பாஜக கிடைத்திருக்கிறது.

ஒரு பக்கம் திமுக-காங்கிரஸ், மறுபக்கம் விஜய்காந்த்-பாஜக என்ற நிலை உருவாகிவிட்டால் நாயுடுவையும், செளதாலாவையும், ஜார்க்கண்ட் மராண்டியையும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பெயரில் ஊறுகாய் கம்பெனி கூட நடத்த முடியாது என்பதை ஜெயலலிதா உணர நெடு நேரம் பிடித்துவிட்டது.

அதனால் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் அதிமுக எம்எல்ஏக்களை சென்னைக்கும் ராஜயசபா எம்பிக்களை (மக்களவையில் அதிமுகவுக்கு எம்பிக்கள் இல்லை) டெல்லிக்கும் அவருக்கே தெரியாமல் பறந்தடித்து ஓடச் செய்தார் ஜெயலலிதா.

அதன் பின்னர் தான் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டனர். அவர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதும் ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஓட்டு போட்டதன் மூலம் அதிமுக தனது பாஜக நட்பு வட்டத்துக்கு முக்கிய சிக்னல் தந்துவிட்டது. மூன்றாவது அணி எல்லாம் சும்மா, விஜய்காந்திடம் எல்லாம் நீங்கள் போக வேண்டாம், நேரம் வரும்போது கைகோர்க்க தயார் என்பது சொல்லப்பட்டுவிட்டது.

ஆனால், இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு (தெரிந்து) இரண்டு இழப்புகள். ஒன்று, இனி அவரை நம்பி சீரியசான கட்சித் தலைவர்கள் யாரும் எந்த சீரியஸ் முடிவும் எடுக்க மாட்டார்கள் (வேறு வழி இல்லாவிட்டால் தவிர). இன்னொன்று, தனது கட்சியே தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றத்தை ஜெயலலிதா தெரிந்தே ஏற்படுத்திவிட்டார்.

மூன்றாவது அணி இன்னும் இருக்கா..? நமக்குத் தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் நமக்குத் தெரியும்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+