ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு:ஜெயேந்திரர், 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னைசங்கர மடத்தின் முன்னாள் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், அப்பு, ரகு, ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கூட்டு சதி செய்தல் (120(பி)), கொலை முயற்சி (307), அத்துமீறி நுழைதல் (309)ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சங்கர மடத்தின் ஆடிட்டராக இருந்த சென்னை மந்தைவெளியைச் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி மர்ம நபர்களால் வீட்டில் வைத்து பயங்கரமாகத் தாக்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் உதவியாளர்களுக்கும் அடி, உதை விழுந்தது.
இது குறித்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந் நிலையில் சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் மேலாளர் சங்கரராமன் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அப்பு உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளும் கைதாகினர்.
இதைத் தொடர்ந்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் தவிர, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், இளையவர் விஜயேந்திரரின் தம்பி ரகு, கூலிப்படை தலைவன் அப்பு, ஆனந்த், கண்ணன், குமார் என்ற சின்னகுமார், ரவி சுப்பிரமணியம், கதிரவன், மீனாட்சி சுந்தரம், லட்சுமணன், பூமிநாதன், ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராகிவிட்டார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜெயேந்திரர் உள்பட சிலர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கும் குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.இதற்காக 12 பேரும் இன்று (ஜூலை 23ம் தேதி) நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி முகம்மத் இசாத் அலி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முதலாவது செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
மேலும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜேந்திரரின் தம்பி, கூலிப்படை தலைவன் அப்பு, ரவி சுப்பிரமணியம் உட்பட 12 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர்.
அவர்கள் 12 பேரிடமும் நீதிபதி முகம்மது இசாத் அலி நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஜெயேந்திரர் இல்லை என்று பதிலளித்தார். மற்றவர்களும் இல்லை என்றே பதிலளித்தனர்.
இதைத் தொடர்ந்து 12 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது இ.பி.கோவின் 3 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கூட்டு சதி செய்தல் (120(பி)), கொலை முயற்சி (307), அத்துமீறி நுழைதல் (309)ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவாயின.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அன்றைய தினம் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும், தொடர்ந்து 5 நாட்கள் சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி அறிவித்தார்.
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications