இரவில் தனியாய் சென்னையில் ஜாலியாய் வலம் வந்த கலாம்
சென்னை:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று இரவு சென்னையை தனியாக சுற்றி வந்துள்ளார். தனக்கு மிகப் பிடித்தமான ஹோட்டலுக்கும் சென்று உணவருந்தினார்.
பதவியில் இருந்து விலகியதும் நேற்று முன் தினம் சென்னை வந்த அவர், நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தனக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவில் டிரைவர் சகிதமாக தனியாகக் கிளம்பினார்.
![]() |
பாதுகாவலர்களை இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பிய கலாம் நேராக அண்ணாசாலையில் உள்ள அன்னலட்சுமி ரெஸ்டாரெண்டுக்கு வந்தார்.
திடீரென கலாம் தனியாக ஹோட்டலுக்குள் வந்ததைப் பார்த்து அதிர்ந்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு அவரை அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
இஸ்ரோவில் பணிபுரியும் தனது நண்பர் வர நேரமானது. ஆனாலும் 30 நிமிடங்கள் அவருக்காக கலாம் காத்திருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உணவருந்தினர்.
அங்கு தனக்குப் பிடித்தமான சைவ உணவை விரும்பி உண்டார். சாதம், சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், அப்பளம் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். அப்போது மணி இரவு 10.30.
கலாம் வந்திருப்பதை அறிந்து ஹோட்டலுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அவரிடம் அனுப்பினர்.
அவர்களுடன் பேசி ஆட்டோகிராப் போட்டுத் தந்துவிட்டு பின்னர் ஹோட்டல் ஊழியர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினார் கலாம்.
பில்லுக்கு அவர் பணம் கொடுக்க அதை ஹோட்டல் நிர்வாகத்தினர் வாங்க மறுக்க, வம்படியாய் காசை வைத்துவிட்டுத் தான் கிளம்பினார் கலாம்.
11.45 மணி வரை ஹோட்டலில் இருந்துள்ளார் கலாம். கலாமுக்கு இந்த ஹோட்டல் மிகப் பிடித்தமானதாம்.
விஞ்ஞானியாக இருந்த காலத்தில் சென்னைக்கு வரும்போது நேரம் கிடைத்தால் அன்னலட்சுமி ரெஸ்டாரெண்டுக்கு நிச்சயம் போய்விடுவாராம்.
(கலாமுக்கு மிகப் பிடித்த உணவு என்ன தெரியுமா?. தயிர் சாதம், வறுத்த மீன்)
முன்னதாக முன்னதாக பேராசிரியர்கள் மாணவர்களுடன் கலாம் உரையாடுகையில் அவரை முன்னாள் ஜனாதிபதி என்று அவர்கள் அழைத்தனர். என்னை அப்படிக் கூப்பிட வேண்டாம், பேராசிரியர் என்று அழைத்தால் போதும் என்றார்.
பின்னர் நிருபர்களை அவர் சந்தித்தார். அந்த பேட்டி விவரம்
கேள்வி: இந்திய நதிகளை இணைப்பது சாத்தியமா?
பதில்: ஏன் சாத்தியமாகாது. நம் நாட்டில் உள்ள மிகப் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா, கோதாவரி, கங்கை, காவிரி, கிருஷ்ணா நதிகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது. சில காலக் கட்டங்களில் காவிரி நதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
காவிரி தண்ணீருக்காக நாம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். என்னுடைய கருத்து என்னவென்றால் முதலில் மாநிலங்களுக்குள்ளே இருக்கும் நதிகளை இணைக்க வேண்டும்.
மேட்டூரில் அணை நிரம்பியதும் வெளியேறும் நீரானது கடலுக்கு தானே செல்கிறது. அந்த தண்ணீரை தாமிரபரணி ஆற்றோடு இணைக்க வேண்டும்.
அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு நதியையும் அதனுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும்.
இதேபோல ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்துக்குள் இருக்கும் நதிகளை இணைக்க வேண்டும். அதன் பிறகு கங்கை, காவிரி, கிருஷ்ணா என்று தேசிய அளவில் நதிகளை ஒருங்கிணைப்பதுசாத்தியமாகும்.
கேள்வி: நீங்கள ஜனாதிபதி பதவி வகித்ததில் 100 சதவீதம் திருப்தி அடைந்தீர்களா?
பதில்: எந்த மனிதனுக்கும் 100 சதவீதம் திருப்தி ஏற்படாது. நான் பதவியில் இருந்தபோது யூனியன் பிரதேசங்கள் உட்பட 28 மாநிலங்களையும் சுற்றிப் பார்த்து விட்டேன். அங்கு பல மக்களின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீரை பார்த்தேன். மேலும் பல மக்களின் கண்களில் துயரக் கண்ணீரை பார்த்தேன்.
துயரத்தோடு இருக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து அவர்களது துன்ப கண்ணீர் நீங்க வேண்டும். 100 கோடி இந்திய மக்கள் முகங்களிலும் புன்னகை மலர வேண்டும். அப்போது தான் முழ திருப்தி கிடைக்கும்.
கேள்வி: இளைஞர் சமுதாயத்துக்கு உங்கள் அறிவுரை என்ன்?
பதில்: இளைஞர் சக்தி மகத்தானது. 25 வயதுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்வது, தன்னம்பிக்கை வேண்டும். நிச்சயம் நம் நாடு பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை அடையும்.
2020ல் மிகச்சிறந்த நிலையை எட்டுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் பாடுபடுங்கள்.
கேள்வி: ஓய்வு காலத்தில் எங்கு தங்கி இருக்கப் போகிறீர்கள்?
பதில்: நான் 5 குறிக்கோள்களை வைத்து இருக்கிறேன்.
1. பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்குவது.
2. திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவது
3. அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருப்பது.
4. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவது.
5. ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவது. இதனால் எனக்கு ஓய்வே இல்லை.
கேள்வி: ஜனாதிபதியாக இருக்கும்போது 1 லட்சம் பள்ளிக் குழந்தைகளை சந்திக்க திட்டமிட்டு இருந்தீர்களே. அந்த ஆசை நிறைவேறியதா?
பதில்: அது எப்போதோ நிறைவேறி விட்டது. 15 லட்சம் குழந்தைகளுக்கு மேல் சந்தித்து விட்டேன் என்றார் குழந்தையாய் மாறி சிரித்தபடி.
வத்தல் குழம்பு, அப்பளம்
இஸ்ரோவில் பணிபுரியும் தனது நண்பர் வர நேரமானது. ஆனாலும் 30 நிமிடங்கள் அவருக்காக கலாம் காத்திருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உணவருந்தினர்.













Click it and Unblock the Notifications