கோவாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது-ஆட்சியமைக்க பாஜக தீவிரம்
கோவா:கோவா அரசியலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பிற கட்சிகள் வாபஸ் பெற்றதால் ஆட்சி அமைத்த 49 நாளிலேயே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த ஜூன் 2ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் கட்சியான காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வென்றன.
காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது. மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2 இடத்திலும், கோவா பாதுகாப்பு முன்னணி 2 இடத்திலும், கோவா ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதைத் தவிர சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றனர்.
சுயேட்சைகள் மற்றும் மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சியின் (எம்.ஜி.பி)எம்எல்ஏக்கள் ஆதரவுடன் திகாம்பர் காமத் தலைமையில் கடந்த ஜூன் 8ம் தேதி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அைமத்தது.
காங்கிரஸ் அரசுக்கு கோவா ஜனநாயக கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. 23 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சுயேட்சை எம்எல்ஏக்களும், மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சி எம்எல்ஏக்களும் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.
மேலும் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ விக்டோரியா ஃபெர்னாண்டஸூம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் திகாம்பர் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் பலம் 19 ஆக குறைந்ததால் (ஆட்சியில் நீடிக்க குறைந்தபட்சம் 20 பேரின் ஆதரவு வேண்டும்) கோவாவில் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த கட்சியும் சுயேட்சை எம்எல்ஏ அனில் சால்கோவோங்கர், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவை ஆதரிக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்தன.
இதையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாகியுள்ளது. இந்த புதிய கூட்டணிக்கு கோவா ஜனநாயக முன்னணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதனால் கோவா சட்டசபையில் பாஜக கூட்டணியின் பலம் 20 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மனோகர் பாரிக்கர் கூறியதாவது,
வெளியூர் சென்றுள்ள கவர்னர் நாளை வந்துவிடுவார். காங்கிரஸ் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. சட்டசபையில் திகாம்பர் காமத் அரசு தூக்கி எறியப்படும்.
சட்டசபையில் காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்கள் இருந்தாலும் சட்டத்தின்படி சபாநாயகர் வாக்களிக்க முடியாது. திகாம்பர் காமத் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட்டுவிடுவார் என்றார்.
ஆனால், முதல்வர் திகாம்பர் காமத் கூறுகையில், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். நான்தான் இப்போதும் முதல்வராக இருக்கிறேன். பெரும்பாலான எம்எல்ஏக்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். என்ன நடக்கின்றது என சட்டசபையில் பார்க்கலாம் என்றார்.
இந்த அரசியல் நெருக்கடி கோவா சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டதால் வரும் திங்கள்கிழமை வரை சட்டசபையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications