டாடாவுக்கு கொடுப்பதைவிட அரசே நடத்தலாம்: ராமதாஸ்
சென்னை:நெல்லை, தூத்துக்குடியில் அமையவிருக்கும் டாடா தொழிற்சாலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாடா நிறுவனம் அமைக்க போகும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் எந்தப் பகுதியிலும் கனிம வளங்கள் கிடைத்தாலும் அதை தனியார் நிறுவனங்களை அனுபவிக்க விடக்கூடாது.
நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம், கோலார் தங்கவயல் சுரங்கம், சேலத்தின் இரும்பு உற்பத்தி போன்றவை எல்லாம் தனியார் நிறுவனங்களா நடத்துகின்றன. இன்று வரை வெற்றிகரமாக அரசாங்கம் தான் அதை சொந்தமாக நடத்தி வருகிறது.
அந்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கும் இல்மனைட், மோனோசைட் போன்ற கனிமங்களும் அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படும் கனிமங்களும், கட்டாயமாக எந்தவொரு தனியார் நிறுவனத்தையும் அனுபவிக்க விடக்கூடாது.
டாடா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுகூட தமிழகத்தில் கிடையாது. சட்ட விரோதமாக சிலர் எடுத்து செல்கிறார்கள் என்பதற்காக தமிழக அரசு அதை வெட்டி எடுப்பதற்காக டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது எந்த வகையில் நியாயம்.
பல்லாயிரக்கணக்கான மக்களை துன்புறுத்தி, கஷ்டப்படுத்தி அதன்மூலம் தொழில்நிறுவனங்கள் அமைவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைக்கட்டும். ஆனால் அதற்காக தமிழ்நாடு அரசு பொதுமக்களிடமிருந்து 10,600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் என்பது மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும்.
சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தின்படி தொழிற்சாலைகள் அமைக்க நில உரிமையாளர்களிடம் நேரடியாக தொழில் நிறுவனங்களே பேசி நிலத்தை வாங்கிக் கொள்வது போலத்தான், டாடா நிறுவனம் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டும்.
நிலங்களை கொடுக்க விருப்பமுள்ளவர்களிடம், டாடா நிறுவனம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயமாக வேலை தரவேண்டும்.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மேம்படுத்த கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றி தரப்போகிறது என சொல்வது நம்பும்படியாக இல்லை.
ஆனால் தமிழக அரசு, இது போன்ற திட்டங்களை புறக்கணிப்பது தேச நலனுக்கு விரோதமானது. அரசு சொல்வதுபடி, திட்டத்தை புறக்கணிக்க வேண்டாம். அதற்கு பதிலாக அணுசக்திக்கு மிகவும் முக்கியமான கனிமவளம் என சொல்லும் தமிழக அரசு இந்த தொழிற்சாலையை ஏன் ஏற்று நடத்தக்கூடாது.
தமிழக அரசு இந்த முடிவை எடுத்தால் பாதிக்கப்படும் மக்கள் தகுந்த நஷ்டஈடும், தகுந்த வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து நிலம் வழங்க முன் வருவார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications