தமிழக சட்டம், ஒழுங்கு: கருணாநிதி திருப்தி
சென்னை:தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடி மாநாட்டு அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.
முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி முகர்ஜி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
![]() |
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை திருப்திகரமாக உள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உள்ளது.
மாநிலத்தில் எங்குமே காவல் நிலையத்தில் கைதிகள் மரணம் என்ற செய்தியே வராத அளவுக்கு காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 177 வாக்குறுதிகளில் 107 வாக்குறுதிகள் உங்களது ஒத்துழைப்பால் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
2006-07ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட 180 அறிவிப்புகளில் 70 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 63 அறிவிப்புகளுக்கு பணி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம் பெற்ற 183 அறிவிப்புகளில், 38 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 52 அறிவிப்புகளுக்கு பணி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
போலி ரேஷன் கார்டுகளை களையெடுக்கும் பணியை ஆட்சித் தலைவர்கள் முடுக்கி விட வேண்டும். ரேஷன் கார்டு வழங்கும் முறையை கம்ப்யூட்டர்மயமாக்கும் பணியை அடிக்கடி மேற்பார்வை செய்ய வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது.
![]() |
தமிழக அரசின் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு திட்டம் மக்களுக்கு உரிய முறையில் போய்ச் சேருவதை ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். நல்ல, தரமான அரிசி மக்களுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இலவச கலர் டிவித் திட்டத்தின் கீழ் 2வது கட்டமாக இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 179 பேருக்கு டிவி வழங்கப்பட்டு விடும். 3வது கட்டமாக 30 லட்சம் கலர் டிவிகளை வழங்கும் பணி டிசம்பர் மாதத்திலிருந்து தொடங்கும்.
நிதி நெருக்கடியால் பஞ்சாயத்துக்கள் தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
இதை சரி செய்ய, 12வது நிதிக் கமிஷன் ஒதுக்கிய நிதி முழுவதையும், கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மாநில நிதிக் கமிஷனிலிருந்து ஒதுக்கப்படும் 47 சதவீத நிதியை 60 சதவீதமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்பத்தான் பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் பல பஞ்சாயத்துக்கள் பெரும் நிதி சிரத்தை எதிர்கொண்டுள்ளன. எனவே அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிதி சீராக ஒதுக்கப்படும். மீதமுள்ள பணம் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கப்படும் என்றார் கருணாநிதி.
நாளையும் மாநாடு நடைபெறுகிறது. அப்போது தேனி மாவட்டத்தில் சமீபத்தில் தலை தூக்கிய நக்சலைட் விவகாரம் குறித்தும் முக்கியமாக பேசப்படவுள்ளது.
இந்த மாநாட்டையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications