கசகஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிம்
மும்பை:மும்பை தொடர்குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியும், அண்டர்வேர்ல்டு தாதாவுமான தாவூத் இப்ராஹிம் இப்போது கசகஸ்தானில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு கட்டமாக தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் நேற்றுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உட்பட மீதமுள்ள 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
![]() |
இதில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை இந்திய அரசு கொண்டு வந்து நீதியின் முன்பாக நிறுத்தும் வரை இந்த வழக்கு முடிந்துவிட்டதாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக துபாய், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என பல நாடுகளில் பதுங்கியிருந்த தாவூத் சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு கராச்சியில் பதுங்கியிருந்தான்.
தாவூத்தை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டபோதெல்லாம் அவர் தனது நாட்டில் இல்லை என பாகிஸ்தான் கூறி வந்தது.
இந் நிலையில் அமெரிக்கா தரப்பிலிருந்தும் தாவூத்திற்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கு தாவூத் நிதி உதவி செய்வதாகவும், ஆப்கனில் விளையும் போதை மருந்துகளை சர்வதேச மார்கெட்டில் விற்கும் வேலையில் தாவூத் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்ததையடுத்து தாவூதை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.
இதையடுத்து தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தாவூத் இப்ராகிமை பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் பத்திரமாக மத்திய ஆசிய நாடான கசகஸ்தானுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தாவூத் அங்கு பதுங்கியிருக்க கசாகிஸ்தானும் பாகிஸ்தானுக்கு உதவி வருவதாக இந்திய உளவுப் பிரிவான ரா தெரிவிக்கிறது. இதை இங்கிலாந்து உளவுப் பிரிவும் உறுதி செய்துள்ளது.













Click it and Unblock the Notifications