பல்லடம்: சுவரில் ஓட்டை போட்டு கடையில்ரூ. 25 லட்சம் நகைகள் கொள்ளை
கோவை:கோவை மாவட்டம் பல்லடத்தில் நகைக் கடையில் இன்று அதிகாலை 300 பவுன் தங்க நகைகள் மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பல்லடம் என்ஜிஆர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு வரிசையாக 40 நகைக் கடைகள் உள்ளன.
இந்த ஷாப்பிங் காம்ப்ளக்சில் பல்லடத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35)ரங்கநாயகி ஜூவல்லரி என்ற நகைக் கடை வைத்துள்ளார்.
இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்றிரவு கார்த்திகேயன் குடும்பத்தினர் கடையை சுத்தம் செய்தனர். குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு 12 மணிவரை கடையில் இருந்துள்ளனர். பின்னர் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந் நிலையில் அதிகாலையில் கடையின் பின்புற சுவரில் கூர்மையான ஆயுதத்தால் துவாரமிட்டு கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர். கடையில் இருந்த 2.25 கிலோ தங்க நகைகளையும், 20 கிலோ வெள்ளி நகைகளையும், பாத்திரங்களையும், கல்லாவில் இருந்த ரூ. 15,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளைக்கு துணை போன சிறுவன்
சுவரில் கொள்ளையர்கள் போட்ட சிறிய துவாரம் வழியாக பெரியவர்கள் யாரும் நுழைந்திருக்க முடியாது என போலீசார் கருதுகினறனர். 12 வயதுக்குட்பட்ட சிறுவனோ அல்லது சிறுமியோ தான் துவாரம் வழியாக கடைக்குள் அனுப்பி கொள்ளையடித்துள்ளனர்.
போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். மோப்ப நாய் கடைக்குள் இருந்து கொள்ளையர்கள் போட்ட துவாரத்தின் வழியாக வெளிேயறி, என்.ஜி.ஆர் ரோடு வழியே சென்று பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்ட் வரை சென்றது.
இதனால் கொள்ளையடித்தவர்கள் நகைகளுடன் ஆட்டோவில் தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நகராட்சி வணிக வளாகத்தில் 40 கடைகளுக்கும் ஒரு காவலாளி தான் இருக்கிறார். அவரும் நேற்றிரவு 12 மணிக்கு மேல்தான் வந்துள்ளார். ஆனால், சுவரில் கொள்ளையர்கள் ஓட்டை போட்ட சத்தம் தனக்கு கேட்கவில்லை என்றும், தான் தூங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அவர் மீதும் சந்தேகம் இருப்பதால் அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து கூடுதல் எஸ்பி ராஜேந்திரன் கூறுகையில்,
இந்த கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடந்துள்ளது. கார்த்திகேயன் கடையில் இருந்து சென்றதை யாரோ பார்த்து தான் கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ துணை போயிருக்கிறார்கள்.
இவர்கள் இந்த கொள்ளையை நடத்திய விதத்தைப் பர்த்தால் ஏற்கனவே பல இடங்களில் கொள்ளையடித்த கும்பலாக இருக்கலாம்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சத்திற்கும் மேலாகும். கும்பலை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications