ராமதாஸ் மீது கருணாநிதி மறைமுக பாய்ச்சல்
சென்னை:தமிழக அரசு எந்தவொரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக செயல்படுபவர்கள் யாரென்று இனி மக்கள் புரிந்து கொள்வார்கள் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தனது அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸை பெயர் குறிப்பிடாமல் அவர் தாக்கியுள்ளார்.
டாடா தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
டாடா நிறுவனம், தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைக்க முன்வந்தது பற்றி எல்லா கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. அருகே சென்று மக்களிடம் கருத்து கேட்கின்றன. அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்களது அபிமானிகளை அழைத்து வந்து கருத்து சொல்ல வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
மூலப்பொருள் கிடைக்கும் இடத்தை விட்டு விட்டு, வேறு எங்கேயாவது தொழிற்சாலை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். வேறு இடத்தில் தொடங்கினாலும், மூலப்பொருளை இங்கிருந்து தானே எடுத்துச் செல்ல வேண்டும். வேறுசிலர் அரசே தொழிற்சாலையை எடுத்து நடத்தலாம் என்கிறார்கள். ரூ.2,300 கோடி உடனே முதலீடு செய்ய அரசிடம் நிதி இருக்கிறதா என்று அவர்கள் யோசிக்கவில்லையே.
நாட்டில் நேர்மையாக, ஊழலுக்கு இடமின்றி தொழில் நடத்துபவர்கள் டாடா நிறுவனத்தினர். இப்போதுதான் தமிழகத்துக்கு டாடா நிறுவனம் முதன்முதலாக வருகிறது என்கின்றனர் சிலர். டாடா சார்பில் தமிழகத்தில் ஏற்கனவே பல நிறுவனங்கள் சிறப்பாக நடைபெறும் விவரம்கூட தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
இதேபோல் டாடா நிறுவனம் மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் தொழிற்சாலை தொடங்குவது குறித்து அங்கே பிரச்சினை தோன்றி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. நந்திகிராமம் என்ற பெயர் நாடு முழுவதும் பேசப்படுகிற ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்தியா சென் ஒரு நாளேட்டுக்கு சிறப்புப் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சிந்தனையை தூண்டுவதாக இருப்பதால் அவற்றை தொகுத்துக் கூறுகிறேன்.
கேள்வி: தொழில்துறைக்கு வேளாண் நிலங்களை கையகப்படுத்துவது குறித்தும், நந்திகிராமம்-சிங்கூர் விவகாரம் குறித்தும் தங்களுடைய கருத்து என்ன?
அமர்தியா சென் பதில்: முதலில் மேற்கு வங்கத்திற்கு தேவையான தொழில் கொள்கை குறித்து ஆராய்வோம். இது ஒரு நீண்டகால கேள்வி மட்டுமின்றி, அதிமுக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. மேற்குவங்கத்தில் தொழில் துறை எவ்வளவு தூரம் பின்னடைந்து இருக்கிறது என்பதை நாம் சரியாக உணரவில்லை. இந்தியாவில் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள முக்கியமான தொழில் மையங்களில் ஒன்றாகவும் கல்கத்தா இருந்தது.
300 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கொல்கத்தா நகரம் உலகின் முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாக இருந்தது. விவசாயம் மட்டுமல்லாமல் தொழில், வர்த்தகமும் வெகு காலத்துக்கு முன்பு அங்கு சிறப்பாக இருந்தன. ஆனால், தற்போது மேற்குவங்கத்தில் தொழில்துறை மிகவும் பின்னடைந்து இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் கொள்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல. தொழிற்சாலை போராட்டங்கள், தொழிலாளர்களுக்கு சில உரிமைகளை பெற்று தந்திருக்கலாம். ஆனால், கொல்கத்தாவில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறியதால், பல உரிமைகளை அவர்கள் இழக்க வேண்டியிருந்தது.
ஜோதிபாசுவுக்கு இந்த பிரச்சனைகள் தெரியும். பெரிய தொழிற்சாலைகள் அமைய வேண்டியதன் அவசியத்தை புத்ததேவ் பட்டாச்சாரியாவும் உணர்ந்திருக்கிறார். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஹூக்ளி, கங்கை நதிக்கரைகளில் உள்ள வளமான நிலங்களில்தான் தொழில் உற்பத்தி நடக்கிறது. ஆகவே வளமான விவசாய நிலங்களை தொழில் துறைக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறுவது மேற்கு வங்கத்தின் தொழில் கொள்கைக்கு விரோதமானதாகும். வங்காளத்தின் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுக்கும் எதிரானது.
வளமான நிலங்களை தொழிற்சாலைக்கு அளித்தாலும், அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு, வேளாண் உற்பத்தி பொருட்களைவிட பல மடங்கு அதி மதிப்புடையதாக இருக்கும். மான்செஸ்டரிலும், லங்ஷயரிலும் வளமான விவசாய நிலங்களில் தான் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி: நிலம் கையகப்படுத்துவது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
அமர்தியா சென்: இதில் சில தவறுகள் நடந்தன. இதை அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஓரளவுக்கு மேற்கு வங்க அரசு இந்த விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளது.
கேள்வி: நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசு வழங்கிய இழப்பீடு குறித்து....
அமர்தியா சென்: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்துவதில் சந்தை விலையை விட அதிக தொகையை அரசு கொடுத்தது. அந்த கோணத்தில் பார்த்தால் அரசு சரியாகத்தான் நடந்து கொண்டுள்ளது. ஆனால் அரசு செய்த மிகப்பெரிய தவறு எது என்றால், நடைமுறைக்கு தக்கபடி யோசிக்காமல் இழப்பீட்டை முடிவு செய்ததுதான்.
விவசாய நிலங்களின் மதிப்பீட்டில் எடுத்துக்கொண்டால், அந்த இழப்பீடு நல்ல தொகை. ஆனால், தொழிற்சாலைக்கான நிலம் என மதிப்பீடு செய்தால் அந்த தொகை மிகவும் குறைவு. அந்த வகையில் அரசு செய்தது நேர்மையான தவறாகும். எதிர்காலத்தில் இதை சரி செய்ய முடியும்.
கேள்வி: வேறு என்னென்ன பிரச்சனைகள் இருப்பதாக கருதுகிறீர்கள்?
அமர்தியா சென்: ஒரு சுதந்திர நாட்டில் தொழில் தொடங்க மக்கள் எங்கும் போகலாம், வரலாம். அரசோ, எதிர்க்கட்சியோ அவர்களை கட்டுபடுத்த முடியாது. மேற்குவங்கம் தொழில் மையமாவதை தடுப்பவர்கள், மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் விவசாயத்தில் வளம் கொழித்தாலும், சிலரே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானவர்கள் தொழில்துறையில் நுழைந்துவிட்டனர். தொழில்துறை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வேலை அளிக்கும். இதனால் அந்த நாடுகளில் தனி நபர் வருமானம் உயர்கிறது.
வேளாண்மையை மக்கள் கைவிட்டதன் காரணமாக ஒட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைவதில்லை. அதற்கு பதிலாக தனி நபர் வருமானம் உயர்கிறது. தொழில்துறை, வேளாண்மை, பொருளாதாரம் வளர வேண்டுமானால் தொழில்மயமாக்க வேண்டும். அரசியல் மூலமாக தொழிலதிபர்களுக்கு நெருக்கடியை உருவாக்குபவர்களும், அவர்கள் நிலம் வாங்குவதை தடுப்பவர்களும் மக்களின் நலன்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.
உலகிலேயே செல்வம் கொழிக்கும் பகுதிகளில் ஒன்று என்ற பெயரை கொல்கத்தா எடுக்க வேண்டுமென்றால் தொழில் மயமாக்க வேண்டும். தொழில்கள் தொடங்க விவசாய நிலங்களை கொடுக்க மறுத்தால், அது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அமர்தியா சென் கூறியிருக்கிறார்.
பொருளாதார மேதையான அவர், மேற்குவங்கம் பற்றி கூறிய கருத்துக்கள் தமிழகத்துக்கும் பல விதத்தில் பொருந்தும்.
தென்மாவட்டங்கள் முன்னேற வேண்டும். அந்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தில் அவர்கள் சிறப்படைய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அரசு செயல்படுகிறது.
அரசு செய்யும் நல்ல காரியங்களுக்கு குந்தகம் விளைவிக்க நினைப்பவர்கள் பற்றி அந்தப்பகுதி மக்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும். அரசு எந்த காரியத்தை தொடங்க நினைத்தாலும், ஏதாவது குறை கூறி திட்டங்களை தாமதம் செய்ய முயல்பவர்கள் யார் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளட்டும் என கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications