டாடா: பொன்முடி குழு 13ம் தேதி மக்களிடம் கருத்து கேட்பு
சென்னை:உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான அரசுக் குழு வருகிற 13ம் தேதி தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்குச் சென்று டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட ஊர் மக்களிடம் கருத்து கேட்கவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர் கல்வி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான உயர் மட்டக் குழு வருகிற 13ம் தேதி சம்பந்தப்பட்ட ஊர்களில் பயணம் செய்கிறது.
இந்தக் குழு முன்பு சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் நேரில் ஆஜராகி தங்களது தரபப்பு கருத்துக்களை எடுத்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ. 2500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு சமீபத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இந்தத் திட்டத்திற்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக உள்ளிட்டவை கடும் ஆட்சேபனை தெரிவித்ததால், இதுகுறித்து மக்களின் கருத்து அறியப்பட்டு முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி பொன்முடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தொழிற்துறை, வருவாய் துறை செயலாளர்கள் மற்றும் சுரங்கம், கனிமத் துறை ஆணையர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications