கத்தாரின் தந்தை மறைவு.. இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு.. அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி
டெல்லி: கத்தார் நாட்டின் தந்தை என போற்றப்படும் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி நேற்று காலமானதை அடுத்து இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இன்று (ஜூலை 13) எந்தவிதமான அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கத்தாா் நாட்டின் முன்னாள் அரசரும், தற்போதைய அரசர் தமீம் பின் ஹமாத் அல் தானியின் தந்தையுமான ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி (74) நேற்று காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

கத்தாா் அரசராக கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் ஆட்சி நடத்திய கலீஃபா அல் தானி, அந்நாட்டை பல்வேறு நிலைகளில் உலகளாவிய முக்கிய மையமாக நிலைநிறுத்தினார். சுதந்திரமான கொள்கை வகுப்பு மற்றும் பிற செயல்பாடுகளின் மூலம் எண்ணெய் வளமிக்க நாடான கத்தாரை சா்வதேச அளவில் முன்னிலைக்கு கொண்டுவந்த சிறப்புக்குரியவர்.
கத்தாா் முன்னாள் அரசரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'ஓா் உண்மையான நண்பராக ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியை இந்தியா நினைவுகூா்கிறது. தொலைநோக்கு பாா்வைமிக்க அவா், கத்தாரை வளா்ச்சி-வளமையின் சிறந்த நிலைகளுக்கு இட்டுச் சென்றாா். கடந்த 2024-இல் எனது கத்தாா் பயணத்தின்போது அவரை சந்தித்ததை கெளரவமாக கருதுகிறேன். கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, அரச குடும்பத்தினா் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கத்தார் முன்னாள் அரசர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்துக் கட்டிடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், இன்றைய தினம் எவ்வித அதிகாரப்பூர்வ கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறாது மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications