திமுக நெருக்கடியால் அதிமுக உண்ணாவிரதபோராட்டத்திற்கு போலீஸ் திடீர் தடை
கரூர்:கருரில் அதிமுகவினர் முறைப்படி அனுமதி பெற்று நடத்த இருந்த உண்ணாவிரதப் பேராட்டத்துக்கு போலீஸ் துணையுடன் திமுகவினர் தடை விதித்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவற்றாத நகராட்சியை கண்டித்து இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 4 நாட்களுக்கு முன்பாகவே போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. இன்று நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக அதிமுகவினர் கரூர், வெங்கமேடு அண்ணாசிலை அருகே பந்தல் போடத் துவங்கினர்.
இந் நிலையில் திமுகவினர் நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறி அதிமுகவினர் பந்தலுக்கு எதிரிலேயே பந்தல் போட ஆரம்பித்தனர்.
மேலும் திமுக தலைமை கழகப் பேச்சாளர் கணேசன் தலைமையிலான திமுகவினர் அதிமுக போராட்டத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கலாம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த அதிமுகவினர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தலைமையில் வெங்கமேடு பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு கூடியதால் பதட்டம் நிலவியது.
இரு தரப்பும் ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர். ஆனால் அதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் அனுமதி பெற்று அதிமுகவினர் நடத்த இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் திடீர் தடை விதித்தனர்.
இதையடுத்து அதிமுகவினர் போலீசாரிடம், 4 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு இப்போது ஏன் தடை போடுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கரூர் மாவட்ட எஸ்பி தலைமையில் வெங்கமேடு பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் சின்னச்சாமி கூறுகையில்,
நாங்கள் முறையாக அனுமதி பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தடை விதித்துவிட்டு திமுகவினரின் சட்ட விரோத செயலுக்கு போலீசார் துணை போயுள்ளனர். இதன் மூலம் திமுகவினர் நடத்தும் அராஜகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இதனால் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
அதிமுக ஆட்சியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியபோது எதிரே உண்ணும் விரத போராட்டங்கள் நடந்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications