கேபிள் டிவி நடத்துவோருக்கு அரசால் பாதிப்பு வராது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசு தொடங்கியிருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் ஏற்கனவே கேபிள் டிவி நடத்துவோருக்கு சிறிதளவும் பாதிப்பு வராது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேபிள் டிவியை அரசுடைமையாக்கிட கடந்த ஆட்சியில் அறிவித்தபோது, கேபிள் டிவியை அரசு நடத்துவதற்கு மாநில ஆட்சிக்கு அதிகாரமில்லை என்றீர்களே. இப்போது அரசு கேபிள் டிவி ஆரம்பித்துள்ளீர்களே இது சரியா, முரண்பாடு இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

பிரச்சனையில் உள்ள நுட்பமான உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

முதலில் முரண்பாடு என்ற சொல்லுக்கு அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கேபிள் டிவியை சேவையை நாட்டுடைமையாக்குவதற்கும், தனியார் ஒருவரைப் போல அரசே கேபிள் டிவியை நடத்துவதற்கும் வித்தியாசமுள்ளது.

மாநிலத்தில் உள்ள எல்லா கேபிள் டிவி சேவைகளையும் அரசே எடுத்துக் கொண்டு வேறு யாருக்கும் உரிமை தராமல் தானே ஏகபோகமாக நடத்துகிற அரசுடைமைக்கும், எல்லோரையும் போல அரசு சார்பில் ஒரு கேபிள் டிவி நிறுவனம் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இப்போது தனியார் ஒருவரைப் போல அரசும் ஒரு கேபிள் டிவி நிறுவனத்தைத் தான் நடத்த இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் இது கேபிள் டிவி இணைப்பைப் பெற்று, கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டும் செய்யுமே தவிர, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்பது தொலைக் காட்சியை நடத்துகிற நிறுவனம் அல்ல.

தனியார் வீடுகளுக்கும், இடங்களுக்கும் நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனமும் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் தற்போது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவரவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அரசு தொடங்கும் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தலாம்.

அரசும் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தும் என்பது ஆட்சிக்குத் தேவையான வருமானத்தைப் பெருக்கிட வரிகளையே போட்டுக் கொண்டிராமல், வரிவிதிப்பதற்கு பதிலாக அரசு வருமானத்துக்காக கேபிள் டிவி நடத்துவது போன்ற வழிமுறைகளையும் கடைபிடித்தால் மக்கள் மீது ஏறும் வரிச்சுமையும் ஓரளவு குறையுமல்லவா?

ஆனால் இந்த அரசு தொடங்கும் நல்ல திட்டங்களையெல்லாம் இழித்தும் பழித்தி எதிர்ப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறவர்கள், எத்தகைய ரகசியத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு யார் யாரை உடன் அழைத்துக் கொண்டு வலை விரித்து எப்படியெல்லாம் ஆசை காட்டித் தூண்டிவிடுகிறார்கள் என்பது கணந்தோறும் அரசின் கவனத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக தம்மிடமுள்ள ஒரு பத்திரிக்கையையும், ஒரு நடிகரையும் அரசு கேபிள் டிவி எதிர்ப்பு செய்திகளுக்காகவே பயன்படுத்தி இப்போது அரசு தொடங்கிடும் கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற இந்த அமைப்பைத் தகர்த்தால் தான் தமது ஏகபோக ஆதிக்கத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

அதற்காக வடநாட்டு வழக்கறிஞர்களை எல்லாம் அழைத்திருப்பதாக சொல்கிறார்களாம். பாவம், நல்லவர்களான கேபிள் டிவிக்காரர்களை பயமுறுத்துகிறார்கள். அவர்களும் இவர்களின் பேச்சை நம்பி தேவையற்ற பீதிக்கு ஆளாகி ஏமாறப் போகிறார்கள்.

எனவே கேபிள் டிவி தொழில் நடத்துவோர் எவரும் யாருடைய தூண்டுதலுக்கும் உள்ளாகி பயப்படத் தேவையில்லை.

ஏதோ குடும்பத் தகராறு காரணமாக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கப்படுவதாகவும், அதன் காரணமாக தற்போது கேபிள் டிவி பணியிலே ஈடுபட்டுள்ளவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது, விஷமத்தனமானது.

எந்தப் பணியிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பாதுகாப்பும், நல்வாழ்வும் ஈட்டித் தருவதுதான் இந்த அரசின் நோக்கமாகுமே தவிர, எந்தவொரு பிரிவினருக்கும் எந்தவிதமான சங்கடத்தை உண்டாக்குவதற்கு எந்த காலத்திலும் இந்த அரசு காரணமாக இருக்காது.

என்னை சந்திப்பதற்காக முதல்வர் தரிசனப் பேரவை என்ற பெயரில் பேரணி ஒன்றை வரும் செப்டம்பர் 12ம் தேதி நடத்தப் போவதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. தரிசனம் கொடுப்பதற்கும் நான் ஒன்றும் மடாதிபதி அல்ல.

என்னை சந்திப்பதற்காக எந்த விதமான பேரணியும் தேவையில்லை. அந்த சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் என்னை சந்திக்க நேரம் கேட்டபோது எனது செயலாளர்கள் விடுதலை நாள் நிகழச்சிக்கு பிறகு நேரம் பெற்றுத் தருவதாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். எனவே நேரம் பெற்றுக்கொண்டு என்னை எப்போது வேண்டுமானாலும் இந்தச் சங்கத்தினர் சந்திப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

எனவே யூகங்களின் அடிப்படையில் வெளிவரும் செய்திகளை நம்பாமல் அனைத்துச் சாரரும் உண்மையை உணர்ந்து, அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+