காஷ்மீரைக் கலக்கிய கொடி குண்டு!
ஸ்ரீநகர்:சுதந்திரப் போராட்ட தினத்தையொட்டி நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றும்போது வெடிக்கும் வகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்தில் அகற்றப்பட்டது.
நேற்று நாட்டின் 60வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தீவிரவாதிகளின் விளையாட்டுக் களமாக உள்ள காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் முதல்வர் குலாம் நபி ஆசாத் பலத்த பாதுகாப்புக்கு இடையே தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் வரை செல்போன் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் பிற்பகல் வரை செயல்படவில்லை.
காஷ்மீரில் சில பகுதிகளில் ஹூரியத் அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
இந் நிலையில், ராம்பன் மாவட்டத்தில் யூரி என்ற கிராமத்தில் தேசியக் கொடிக்குள் குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தேசியக் கொடியை ஏற்றும்போது வெடிக்கும் வகையில் அது வைக்கப்பட்டிருந்தது.
முன்கூட்டியே பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து விட்டதால், பெரும் அசதம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பெரிய அளவில் வன்முறையின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுதந்திர தினத்தை கொண்டாடியது.












Click it and Unblock the Notifications