ரயில்வே கட்டும் குறைந்த கட்டண ஹோட்டல்கள்
டெல்லி:ரயில்வே சார்பில் 100 இடங்களில் குறைந்த பட்ஜெட் ஹோட்டல்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ரயில்வே துறையின் சார்பில் அமைக்கப்படும் இந்த ஹோட்டல்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாத் துறையின் (ஐ.ஆர்.சி.டி.சி) மூலம் பொதுமக்கள் - தனியார் கூட்டுமுயற்சியாக அமையும்.
நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவும் வகையில் இவை கட்டப்படவுள்ளன. இந்த ஹோட்டல்கள் கட்டுவதற்கு நிலங்கள் டெண்டர் மூலம் பெறப்பட்டு வருகிறது. இதுவரை ஐஆர்சிடிசி மூலம் 20 இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டது. 9 இடங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
மேலும் 71 இடங்கள் வரும் பிப்ரவரிக்குள் முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
இந்த ஹோட்டல்கள் கட்டுவதற்கு நிதித் தேவை, ஒவ்வொரு ஹோட்டல்களின் கட்டுமானத்திற்கு ஏற்ப மாறும். ஹோட்டல்கள் அமைக்கப்படும் இடத்தின் அளவு, அறைகளின் எண்ணிக்கை மற்றும் அமையப்போகும் இடத்திற்கேற்ப மாறுபடும்.
சராசரியாக ஒரு ஹோட்டலுக்கு ரூ.20கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல்கள் பணி முடிவடையும் காலம் குறித்து ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications