வங்கி ஏடிஎம் காவலாளி கொலை:6 மணி நேரத்தில் கொலையாளி கைது
சென்னை: சென்னையில் வங்கி ஏடிஎம் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற நாகலாந்து மாநில இளைஞரை 6 மணி நேரங்களில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை சேப்பாக்கம், கடற்கரை காமராஜர் சாலையில், அரசு அலுவலங்கள் நிரம்பிய எழிலகம் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் யுடிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.
அரசு அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையம் என்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த மையத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த ரவி (42) மற்றும் இன்னொருவர் காவலாளிகளாக இருந்தனர்.
![]() |
நேற்று இரவு ரவி காவல் பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவு12.35 மணிக்கு வடமாநில இளைஞர் ஒருவர் அங்கு வந்தார். உள்ளே அவர் பணம் எடுக்கச் சென்றார். வெளியே ரவி நின்றிருந்தார்.
உள்ளே சென்ற நபர் கார்டு ஒன்றை இயந்திரத்திற்குள் போட்டுள்ளார். திரும்பத் திரும்ப கார்டை வெளியே எடுப்பதும், உள்ளே போடுவதுமாக அவர் இருந்ததால் ரவிக்கு சந்தேகம் வந்தது.
ஒரு வேளை கார்டு சிக்கி விட்டதோ என்று எண்ணிய அவர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். அப்போது அந்த இளைஞர் ஒரு கத்தியால் பணம் இருக்கும் பகுதியை நெம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
![]() |
உடனே சத்தம் போட்டு அந்த நபரை வெளியேறுமாறு கூறியுள்ளார் ரவி. ஆனால் பணத்தைக் கொள்ளையடிக்க வந்த அந்த இளைஞரோ, கத்தியால் ரவியை சரமாரியாக குத்தி விட்டு வெளியேறி ஓடினார்.
ஆனாலும் விடாத ரவி, வெளியே ஓடி வந்து அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளார். மேலும் உதவி கேட்டு கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ரவியின் மார்பு மற்றும் கழுத்தில் குத்தினார்.
கடற்கரைச் சாலையில், கத்தியுடன் ஒருவர் ஓடுவதையும் ரத்த வெள்ளத்தில் ஒருவர் விழுந்து கிடப்பதையும் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கத்தியுடன் ஓடிய நபரைப் பிடிக்க யாரும் முன்வரவில்லை என்பதுதான் இதில் கொடுமை.
தகவல் அறிந்ததும் அண்ணா சதுக்கம் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தபோது ரவி இறந்து கிடந்தார். கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
5 தனிப்படை போலீஸாரும் குற்றவாளியைப் பிடிக்க தீவிரமாக களம் இறங்கினர். கொலையாளி குறித்து ஒருவர் கொடுத்த தகவல் போலீஸாருக்கு பெரும் உதவியாக இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த தினாய்வோயி கோப்சோ என்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றவர் என்றும் ரவியைக் கொலை செய்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர். இதையடுத்து கோப்சோவை போலீஸார் கைது செய்தனர்.
6 மணி நேரங்களில் குற்றவாளி பிடிபட்டார். இதையடுத்து தனிப்படை போலீஸாரை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் பாராட்டினார்.














Click it and Unblock the Notifications