இடதுசாரி மிரட்டல்: கூட்டணிக் கட்சிகளுடன்ஆலோசிக்க காங். முடிவு
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் விடுத்துள்ள மிரட்டலைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும். அதை அமல்படுத்த முயன்றால் கடுமையான விளைவுளை சந்திக்க நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மிரட்டல் கலந்த கோரிக்கையை விடுத்து விட்டுச் சென்றார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு முன்பாக வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட முடிவு செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார்.
பின்னர் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், இதுகுறித்து கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டம் முடிந்தவுடனேயே, அமைச்சர் முகர்ஜியின் வீட்டுக்கு ராஷ்டிரிய ஜனதாதள் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வந்தார். அங்கு லாலுவுடன் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மேலும், இடது சாரித் தலைவர்களையும் முகர்ஜி தனித் தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications