தூக்கத்திலிருந்து விழிக்காத மகனைஅடித்துக் கொன்ற தந்தை!
ஹோஷியார்பூர்:படுக்கையிலிருந்து எழுந்திரிக்குமாறு பலமுறை கூறியும் எழுந்திருக்காத மகன் மீது ஆத்திரமடைந்த தந்தை அவனை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. பஸ்ஸி ஹசட் கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங். இவரது மகன் குர்ஜித் சிங்.
நேற்று காலை ஆறரை மணிக்கு கண் விழித்து எழுந்தார் ஜோகிந்தர் சிங். அப்போது அவரது மகன் குர்ஜித் தூங்கிக் கொண்டிருந்தான். நேரமாகி விட்டது என்று கூறி மகனை எழுப்பினார். பின்னர் பால் கறப்பதற்காக வெளியே போனார்.
திரும்பி வந்து பார்த்தபோது மகன் எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்தார். மீண்டும் மீண்டும் எழுப்பிப் பார்த்தார்.
மகன் எழுந்திருப்பதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோகிந்தர் சிங் தனது கையில் இருந்த இரும்புக் கம்பியால் ஓங்கி மகனை அடித்துள்ளார்.
இதில் குர்ஜித் சிங்கின் தொண்டை உடைந்து போனது. ரத்த வெள்ளத்தில் மிதந்த குர்ஜித் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தான். இதைப் பார்த்த ஜோகிந்தர் சிங் அங்கிருந்து ஓடி விட்டார்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து ஜோகிந்தரின் மனைவி ரஜ்வந்த் கெளர், போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தலைமறைவான ஜோகிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications