தென்காசி கொலை வழக்கு: கைதிகள்சேலம், கடலூர் சிறைகளுக்கு மாற்றம்
தென்காசி:தென்காசி படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பு கருதி நெல்லை சிறையிலிருந்து சேலம் மற்றும் கடலூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தென்காசியில் கடந்த 14ம் தேதி நடந்த மோதலில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் சகோதரர் சக்திவேல் பாண்டியன், பிஸ்தா மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறைக்குள் பாதுகாப்பு இருக்காது என்ற கருத்து எழுந்ததால் தற்போது முக்கியக் கைதிகளை வேறு சிறைகளுக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
அதன்படி அலாவுதீன் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சக்தி பாண்டியன், பிஸ்தா மணி ஆகியோர் கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேந்திரன் என்பவர் சில தினங்களுக்கு முன்பு நாங்குனேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டனர். அதன்படி நீதிபதி குருவையா இரு தினங்களுக்கு அனுமதி வழங்கினார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய செண்பகம், பூக்கடை கணேசன், ஆட்டோ ரமேஷ், முகம்மது இஸ்மாயில் (ஆலங்குளம் துணை தாசில்தாரின் மகன்), செய்யது சுலைமான் சேட், பசூலூதின், மசூது, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications