சஞ்சய் தத்துக்கு தற்காலிக ஜாமீன்!
டெல்லி:மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தும் சேர்க்கப்பட்டார். சட்டவிரோதமாக ஏ.கே.56 ரக துப்பாக்கியை அவர் பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு கடந்த ஜூலை 31ம் தேதி மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் புனே அருகில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் தத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல சஞ்சய் தத்துடன் சேர்த்து தண்டனை விதிக்கப்பட்ட அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 6 பேருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தண்டனை விவரம் அடங்கிய தீர்ப்பின் நகல் கைக்கு கிடைக்கும் வரை அனைவரும் ஜாமீனில் வெளியே இருக்கலாம்.
தீர்ப்பு நகல் இவர்கள் கைக்கு வழங்கப்படும்போது நீதிமன்றத்தில் அனைவரும் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தண்டனை விவர நகல் அடுத்த மாத வாக்கில் வழங்கப்படும் என்பதால் குறுகிய காலமே சஞ்சய் தத் ஜாமீனில் வெளியே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications