தலையில்லா கோழிகள் தேவைதானா?-கருணாநிதி
சென்னை:பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 இட ஒதுக்கீடு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் நீதிபதி ரவீந்திரன் இடையிடையிலே கேட்கும் கேள்விகள் ஆறுதலைத் தரும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை
கேள்வி- திமுக ஆட்சியை குறை கூற ஏதாவது கிடைக்காதா என்று தேடியலைந்து கடைசியில் குப்பை கூளங்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டு சிலர் போருக்கு வருகிறார்களே
பதில்- அவர்கள் பொறுக்கியெடுத்துக் கொண்டு போருக்கு வருகிற அளவுக்கு அந்தக் குப்பைகளைக் கூட நம் விட்டு வைக்காமல் தூய்மைப்படுத்திட வேண்டுமல்லவா
கேள்வி- தனது குடும்பப் பகையை தீர்க்கத்தான் கேபிள் டிவியை அரசு நடத்தப் போவதாக ஒருவர் பேட்டி கொடுத்திருக்கிறாரே
பதில்- கேபிள் டிவி கார்பரேஷன் தொடங்கப்பட்டு அதனால் வேலைவாய்ப்பும் பெருகி, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதன் சேவை கிடைக்கும்போது இப்போது பேட்டி கொடுத்த என் நண்பர் தன்னை திருத்திக் கொண்டு வாழ்த்து சொல்லத்தான் போகிறார்.
கேள்வி- கேபிள் டிவி பற்றிய இதே அறிவிப்பைத்தான் ஜெயலலிதா தனது ஆட்சியில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்தார். தள்ளாத வயதில் கவர்னரைப் பார்த்து அதை கருணாநிதி தடுத்தார் என்று படித்த நடிகர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளாரே
பதில்- இதில் தள்ளாத வயது என்பது மட்டுமே உண்மை. சட்டத்தைத் தடுக்க நான் கவர்னரிடம் சென்றதாகக் கூறுவது தான் கடைந்தெடுத்த பொய்மை. பிரச்சனை என்வென்றால்- ஜெயலலிதா, கேபிள் டிவியையே வேறு யாரும் உரிமை பெறாமல் மாநில அரசாங்கமே நடத்த தேசியமயமாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.
அப்படி சட்டம் செய்ய மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என்பதால், கவர்னர் அதை ஏற்கவல்லை. அதனால் சட்டம் வர முடியவில்லை.
ஆனால் இப்போது நாம் கேபிள் டிவியை அரசுக்கு மட்டுமே உரிமை என்று ஆக்காமல், அரசும் கேபிள் டிவி நடத்த முன் வந்துள்ளது. நன்கு படித்தவர்களால் கூட இந்த உண்மையை உணர முடியாதது வருந்தத்தக்க செய்தியே ஆகும்.
கேள்வி- அரசின் சார்பில் முதலமைச்சர் கேபிள் டிவி தொடங்குவது சுமங்கலியை (சன் டிவியின் கேபிள் நெட்வோர்க்) முடக்கும் திட்டம் என்று ஒருவர் யூகம் வெளியிட்டுள்ளாரே
பதில்- சுமங்கலிகள் வாழ வேண்டும் என்று தானே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமே கொண்டு வரப்பட்டு, சுமங்கலியாக விரும்புகிற ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி ரூ. 15,000 தரப்படுகிறது.
இந் நிலையில் சுமங்கலிகளை தவிக்க விடும் சூழ்ச்சியோ, சூது மனப்பான்மையோ இந்த அரசிடம் இருக்க முடியுமா
ஆனால், இப்போது சுமங்கலிகள் வாழ வேண்டுமென்று துடியாய் துடிப்பவர்கள் எல்லாம் சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த சுமங்கலி பற்றி எப்படியெல்லாம் கவலைப்பட்டார்கள் என்பது தான் ரகசியம்.
கேள்வி- வரும் நாட்களில் கம்பி இல்லாமல் வீடுகளுக்கு ஒளிபரப்பு போய்ச் சேரும் தொழில்நுட்பம் வர இருப்பதாகவும், இந் நிலையில் தமிழக அரசு பின்னோக்கிப் போவதாகவும் சிலர் பேட்டி கொடுத்துள்ளார்களே
பதில்- அப்படி ஒரு முன்னேற்றம் வந்தால், அதையும் தமிழக அரசின் கார்ப்பரேசன் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா.
வருங்காலத்தில் வரக்கூடிய புதுமைகளையும் பயன்படுத்திக் கொள்வதில் எந்தவிதமான தடங்கலும் இருக்காது.
கேள்வி- எங்கள் மாவட்டத்திற்கு வரும் எந்த தொழிற்சாலையையும் நான் எதிர்க்கவில்லை என்று வைகுண்டராஜன் அறிக்கை விடுத்துள்ளாரே
பதில்- எதிர்ப்பவர்கள் எல்லாம் ஏற்கத்தக்க அளவிற்கும் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் அளவிற்கும் தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேறும்.
கேள்வி- இட ஒதுக்கீடு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் நீதிபதி ரவீந்திரன் இடையிலே கேட்கும் கேள்விகள் எல்லாம் மன நிறைவு அளிக்கத்தக்கவையாக உள்ளனவா
பதில்- இந்தியாவில் 52 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கென உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும், பரம்பரை பரம்பரையாக 20 சதவீதம் முதல் 30 சதவீதம் உள்ள சமுதாயத்தினர் அனைத்து லாபங்களையும் அனுபவித்து வந்த நிலையில், 80 முதல் 80 சதவீதம் உள்ள சமுதாயத்தினர் அந்த லாபங்களில் ஓரவாவது அனுபவிக்க முயற்சி செய்வதில் என்ன தவறு என்றும், பட்டியல் எடுக்க வேண்டுமென்று சொல்வது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் மனம் மகிழத்தக்க வகையிலே கருத்துக்களை வெளியிட்டிருப்பது ஆறுதலைத் தருகிறது.
கேள்வி- தலையில்லா கோழிகள் தேவைதானா
பதில்- தேவையில்லை என்பது தான் என்னுடைய கருத்து. பிரச்சனை பெரிதாக ஏழுந்துள்ள நிலையில் ஒவ்வொருவரும் அதற்கு சுமூக வழி காண முயல வேண்டுமே திவர, தங்களால் முடிந்த அளவுக்கு தூண்டிவிடுவது என்பது நல்லதல்ல. இருந்தாலும், அப்படிச் சொன்னவரே (இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரொனென் சென்) மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications