தென்னக ரயில்வேயைப் பிரியுங்கள்-அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை
டெல்லி:சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டால், திருவனந்தபுரம், பாலக்காடு, மங்களூர் ரயில் கோட்டங்களை இணைத்து கேரளாவுக்கென தனி ரயில்வே மண்டல அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் கோட்ட விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து மனு கொடுத்தார். அப்போது சேலம் கோட்டம் தொடர்பாக விரிவாக விவாதித்தார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் கோட்டம் அமைப்பதில் ரயில்வே துறை உறுதியாக இருந்தால், கேரளாவுக்கென ஒரு ரயில்வே மண்டல அலுவலகத்தை உருவாக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயைப் பிரித்து திருவனந்தபுரம், பாலக்காடு, மங்களூர் (இது கர்நாடகாவில் உள்ளது) ஆகிய கோட்டங்களை இணைத்து புதிய ரயில்வே மண்டலத்தை கேரளாவுக்கென உருவாக்க வேண்டும். இதுதான் எங்களது கோரிக்கை என்றார்.
பின்னர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள முதல்வர் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும். சேலம் கோட்டம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களுடன் பேசப்படும் என்றார் லாலு.
அச்சுதானந்தனின் இந்தப் புதிய கோரிக்கைக்கு கண்டிப்பாக கர்நாடகாவில் ஆதரவு இருக்காது. எனவே அச்சுதானந்தன் பேச்சால் கர்நாடகத்திலும் கொந்தளிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications