சல்மான் கான் கைது - சிறையில் அடைப்பு
ஜோத்பூர்:மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நடிகர் சல்மன் கான், ஜோத்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது அவரை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்புக்காக வந்திருந்த சல்மான் அரிய வகை சிங்காரா மான்கள் இரண்டை வேட்டையாடிக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
![]() |
இதை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் ஐந்து ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.
மேலும் சல்மானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது. அவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஜோத்பூர் நீதிமன்றத்தில் சரணடைய சல்மான் கான் முடிவு செய்தார். இதற்காக இன்று காலை மும்பையிலிருந்து விமானம் மூலம் ஜோத்பூர் கிளம்பினர். அவருடன் தம்பி சொஹைல்ல் கான் மற்றும் வழக்கறிஞர் தீபேஷ் மேத்தா ஆகியோரும் வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை கூடுதல் எஸ்.பி. சவாய் சிங் கோதாரா தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். சல்மான் கானைக் கைது செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு சல்மானின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். சல்மான்கான் சரணடையவே வந்துள்ளார். அவரைக் கைது செய்வதை ஏற்க முடியாது என்றார். ஆனால் அதை ஏற்காத போலீஸார், சல்மான் கானைக் கைது செய்ய வாரண்ட் உள்ளதாகவும், அதை தாங்கள் அமல்படுத்தியாக வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து சல்மான் கைது செய்யப்பட்டார். அவரை ஜீப்பில் ஏற்றிய போலீஸார், ஜோத்பூர் தலைமை குற்றவியல் நீதிபதியிடம் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் சல்மானின் வக்கீல்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருப்பினும் இந்த மனு திங்கள்கிழமைதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே திங்கள்கிழமை வரை அவர் சிறையில்தான் இருந்தாக வேண்டும்.
முன்னதாக மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சட்டத்தை மதிப்பவன். எனவே நீதிமன்ற உத்தரவுப்படி சரணடைய செல்கிறேன். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதை செய்கிறேன் என்றார்.
சல்மான் கான் ஜோத்பூர் வரும் தகவலை அறிந்ததும், நீதிமன்ற வளாகம், சிறை ஆகியவற்றுக்கு முன்பு அவரது ரசிகர்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர்.



Click it and Unblock the Notifications
