காங். தலைவர்களுக்கு சொரணை இல்லை- எம்.எல்.ஏ ஆவேசம்
சென்னை: 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்குவதற்காகவும், சிலர் எம்.பி, எம்.எல்.ஏ ஆவதற்காகவும் திமுகவிடம் காங்கிரஸ் கட்சியை தமிழக தலைவர்கள் அடகு வைத்து விட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு சொரணையே கிடையாது என்று போளூர் வரதன் எம்.எல்.ஏ. கூறியதால் தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. இந்த கோஷ்டிகளில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான கோஷ்டியும் ஒன்று. இந்தக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏ போளூர் வரதன்.
நேற்று சென்னையில் நடந்த தேசிய ஜனநாயக தலித் இயக்க மண்டல மாநாட்டின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை முன்வைத்துக் கொண்டே, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு சொரணை கிடையாது என்று ஆவேசமாக பேசினார் போளூர் வரதன்.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போளூர் வரதன் பேசும்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மத்திய அமைச்சர்கள் ஆவதற்காகவும், சிலர் எம்.பி., எம்.எல்.ஏ ஆவதற்காகவும் இன்னொரு கட்சியிடம் காங்கிரஸை அடகு வைத்து விட்டனர்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு சொரணை என்று ஒன்று இருந்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி, காங்கிரஸ் கட்சியின் மதிப்பை மக்கள் முன் நிலை நிறுத்த வேண்டும்.
தலித் மக்களை புறக்கணிக்கக் கூடாது. அவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படையே. அவர்கள் நலனுக்காக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
பதவிக்காக அலைவதை விட்டு விடுங்கள். அதை விட்டு விட்டு தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக போராட முன்வாருங்கள் என்று படு கோபமாக பேசினார்.












Click it and Unblock the Notifications