பிரபல நகை வியாபாரி வீட்டில்ரூ. 50 லட்சம் நகைகள் கொள்ளை
கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரியின் வீட்டில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கும்பகோணம், ரெட்டி ராயர்குளம் கீழ்கரையைச் சேர்ந்தவர் கமல்குமார் மேத்தா (50). இவர் கும்பகோணம் பெரிய தெருவில் வைர, தங்க நகை கடை வைத்துள்ளார். டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற இடங்களிலிருந்து மொத்தமாக நகைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 24ம் தேதி குடும்பத்தோடு சென்னைக்கு மேத்தா சென்றார். அப்போது கடை ஊழியரான பூவராகவன் என்பவரை வீட்டிற்கு காவல் வைத்து விட்டுச் சென்றார் மேத்தா. நேற்று முன்தினம் பூவராகவனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் அவர் வீட்டுக்குப் போகவில்லை.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் மேத்தா வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டிலிருந்த 4 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், வைர கற்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஊர் திரும்பிய மேத்தா, திருட்டு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் கொடுத்தார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடை ஊழியர் பூவராகவனிடமும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications