ராமர் பாலம்: செப். 12ல் விஎச்பி நாடு தழுவிய சாலை மறியல்
ராமேஸ்வரம்:ராமர் பாலத்தைக் காக்கக் கோரி செப்டம்பர் 12ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்த விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் வி.எச்.பி. பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறுகையில், ராமர் பாலத்தை இடிக்கும் முடிவில் மத்திய அரசு தீவரமாக இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போதுள்ள திட்டப்படி சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இந்துக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். வெறும் கல்தானே என்று கூறி பாமியான் புத்தர் சிலையை இடித்த தலிபான் தீவிரவாதிகள் போல மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடக்கக் கூடாது.
தற்போதைய திட்டத்தின்படி சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த அரசுக்கு இந்துக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களின் உணர்வுகளோடு மத்திய அரசு விளையாட நினைக்கக் கூடாது என்றார்.
ராமர் பாலத்தைக் காக்கக் கோரி செப்டம்பர் 12ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொகாடியா அறிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வருகிற 30ம் தேதி டெல்லியில் ராமர் பால பாதுகாப்பு இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications