எனது கட்சி நாடார் கட்சி அல்ல: சரத்
சென்னை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நாடார் சமுதாயத்தினரின் கட்சியாக இருக்காது. அனைத்து சமுதாயத்தினரும் இக்கட்சியில் இடம் பெற்றிருப்பார்கள் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
![]() |
தமிழக அரசியல் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சரத்குமார். கட்சி தொடங்கப் போவதாக கூறியிருந்த அவர் சொன்னபடி நேற்று மாலை சென்னையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் தனது கட்சியின் பெயர், கொடியை அறிவித்தார்.
வடபழனி பத்மா ராம் கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சரத்குமாரின் மனைவி ராதிகா, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கட்சியின் பெயர் மற்றும் கொடியை சரத்குமார் அறிமுகப்படுத்தினர். கட்சியின் கொடியாக கீழே மஞ்சள், மேலே சிவப்பு மற்றும் கொடியின் வலது ஓரத்தில் நட்சத்திரம் ஆகியவை உள்ளது.
இதற்கு சரத்குமார் கொடுத்த விளக்கம் மஞ்சள் மங்களகரம், சிவப்பு புரட்சி, நட்சத்திரம் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் என்றார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளை அறிவித்தார் சரத். மாவட்டச் செயலாளர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
![]() |
நிகழ்ழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், இன்று எனது வாழ்க்கையில், புதிய அத்தியாயம் தொடங்குகிறது. சாதி, சமயமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே எங்களது கட்சியின் நோக்கம். அதனால்தான் கட்சியின் பெயரில் சமத்துவம் இருக்கிறது.
கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெறவுள்ளது. ஒரு கட்சி என்றால் முன்னோடி இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடத்திய, பொற்கால ஆட்சி நடத்திய காமராஜரைத்தான் முன்னோடியாகக் கொண்டுள்ளேன்.
காமராஜர் ஆட்சிதான் சிறந்தது, அவரது ஆட்சிக்காலம்தான் பொற்கால ஆட்சி என்று அத்தனை கட்சிகளும் கூறியுள்ளன, புகழ்ந்துள்ளன. எனவே காமராஜர் ஆட்சிதான் தமிழகத்திலேயே சிறந்த ஆட்சி என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காமராஜர் அனைவரின் மூச்சிலும் நிறைந்துள்ளார். எனது மூச்சிலும் அவர் இருக்கிறார். எங்களது கட்சியை அவர் வழிநடத்துவார்.
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு வந்த ஆட்சிகளில் மக்கள் நலத் திட்டங்கள் இடம் பெறவில்லை. செயல்படுத்தப்படவில்லை.
காமராஜர் நாடார் இனத்தில் பிறந்தார் என்பது பெருமை அளிக்கும் விஷயமாகும். நான் நாடார் சமுதாயத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். அதற்காக இந்தக் கட்சி நாடார் கட்சியாக இருக்காது. அனைத்து சமூகத்தினரும் இதில் இடம் பெற்றிருப்பார்கள்.
அனைவரையும் எங்களது கட்சி அரவணைத்துச் செல்லும். அரசின் நல்ல திட்டங்களை வரவேற்போம்.
நான் கட்சி தொடங்குவதை பல்வேறு கட்சித் தலைவர்களும் பாராட்டி வரவேற்றுள்ளனர். முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோர் வாழ்த்தி செய்தி அனுப்பியுள்ளனர். இந்த அரசியல் நாகரீகம், அரசியல் கலாச்சாரம் வளர வேண்டும்.
பூவைப் போன்ற எங்களது கட்சியின் வாசம் போகப் போகப் புரியும். சினிமாவில் எப்படி சாதி இல்லையோ அதுபோல அரசியலிலும் சாதிகளற்ற போக்கு உருவாக வேண்டும்.
யார் வேண்டுமானாலும் எங்களது கட்சியில் சேரலாம். ஆனால் பிற கட்சிகளிலிருந்து வருபவர்களை உடனடியாக சேர்க்க மாட்டோம். உரிய முறையில் விசாரித்து விட்டுத்தான் அவர்களை சேர்ப்போம். தகுதி இருந்தால்தான் சேர்ப்போம்.
எங்களது கட்சியினர் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. அப்படிச் செய்வதாக தெரிந்தால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
எனது கட்சிக்கும், தேமுதிகவுக்கும் இடையே எந்தவிதப் போட்டியும் இருக்காது. மக்களுக்கு நல்லது செய்வதில்தான் போட்டி இருக்கும். இதில் விஜயகாந்த்தை விட நான் சற்று வேகமாக, திறம்பட செயல்படுவேன்.
விஜயகாந்த்தை விட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனவே விஜயகாந்த்தை விட நான் திறம்பட செயல்பட முடியும்.
கொள்கை ரீதியாக இன்று யாரும் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை. தேர்தலுக்காகவும், சீட்டுக்காகவும்தான் கூட்டணி வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், எனது கட்சிக்கும் காமராஜர்தான் பொது முன்னோடி. இரு கட்சிகளும் காமராஜர் ஆட்சியைத்தான் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
எனவே இரு கட்சிகளும் இணைந்து செயல்படுமா என்ற கேள்வி எழலாம். தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் இணக்கமாக செயல்படலாம். அதேபோல தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்கலாம். எதுவாக இருந்தாலும் இப்போது முடிவெடுக்க மாட்டோம். தேர்தலின்போதுதான் அதுகுறித்தெல்லாம் முடிவெடுப்போம் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு சரத்குமார் அளித்த பதில்கள்
கேள்வி: நிர்வாகிகள் நாடார் சமுதாயத்தினராக இருப்பதால், உங்களது கட்சி நாடார் சமுதாயக் கட்சியா?
பதில்: நான் நாடார் சமுதாயத்தில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனால் இது அரசியல், இந்தக் கட்சி அனைவருக்கும் பொதுவானது.
கேள்வி: மத்திய அமைச்சர் பதவி கொடுக்காததால்தான் நீங்கள் திமுகவிலிருந்து விலகினீர்களா?
பதில்: அதில் உண்மை இல்லை. நான் தொடர்ந்து திமுகவில் இருந்திருந்தால், யாரையும் எதிர்க்காமல் இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.
கேள்வி: உங்களது அரசியல் வாழ்க்கையில் மனைவி ராதிகாவின் பங்கு?
பதில்: அவர் எனது வழிகாட்டி, ஆலோசகர், ஊக்க சக்தி என்றார் சரத்குமார்.
கட்சியின் கொள்கைகள்
பின்னர் தனது கட்சியின் கொள்கைகளை சரத்குமார் வெளியிட்டார்.
- பெருமை வாய்ந்த தமிழினத்தின் கலாச்சார மரபுகளைப் பேணிக் காப்பதில் முன்னுரிமை.
- உலக அரங்கில் தமிழ் மொழியின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த பணியாற்றுதல்.
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கையும், விசுவாசமும் வைத்து, சோஷலிசம், மதச்சார்பின்மை, வலுவான ஜனநாயகம் ஆகிய குறிக்கோள்களுடன், இந்திய தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு காக்கும் கடமை உணர்வுடன் கட்சி செயல்படும்.
- சாதி, இன, மொழி வேறுபாடுகள் எனும் குறுகிய மனப்பான்மையுடன் தேசத்தின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தும் எந்த ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும்.
- தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாதகம் ஏற்படாத வகையில், பிற மொழிகளை தமிழ் மக்கள் கற்றுக் ெகாள்வதற்கு ஊக்கமளித்தல்.
- வறட்சியாலும், வெள்ளப் பெருக்காலும் ஏற்படும் பொருளாதர பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க, தேசிய நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து குறிப்பாக தென்னிந்திய நதிகளை இணைக்கக் கோரி முன்னுரிமை அடிப்படையில் செயல்படுதல்.
- ஜனநாயக அமைப்பின் ஆணிவேர் தேர்தல். வாக்களிப்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல தார்மீக கடமையும் கூட. ஆனால் தேசம் முழுவதும் வாக்குப் பதிவு குறைந்த அளவுகளிலேயே பதிவு செய்யப்படும் சூழ்நிலை வளர்ந்து வருகிறது. இந்த நிலை மாறி எல்லோரும் வாக்களிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உணர்ந்து 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காக அடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அயராது பாடுபடும்.
- பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சரி சம வாய்ப்பும், அவர்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் பாடுபடுவது.
- பொருளாதாரத்துடன் கூடிய சமூக நீதிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் ஓட்டு வங்கி அரசியல் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தாமல், புதிய தொழில், பொருளாதார கொள்கைகளை உருவாக்கி மக்களை சுய சார்புடன் வாழ வைக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே கட்சியின் முதற் கட்ட நடவடிக்கையாக இருக்கும்.














Click it and Unblock the Notifications