ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று-கருணாநிதி
சென்னை:ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, அது பொறியாளர்களின் படைப்பல்ல என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிவிடுவதற்கு முன்பே சென்னை மாநகர காவல் துறையினர் ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்தி விட்டார்களே?. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர் சாதித்துக் காட்டிவிட்டனர் என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தான் துளிர்த்தது.
கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை உடனடியாக அள்ளுவதற்கு முதல்வரே தலையிட்டு குப்பைகளை அள்ளுவதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்ட நிலையிலும் ஒரு சில கட்சிகள் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுகிறார்களே?
பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டிற்கு காட்டிக் கொள்வது?. அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ள விட மாட்டேன் என்கிறீர்களே?
கேள்வி: மானை வேட்டையாடினார் என்பதற்காக இந்தி நடிகர் ஒருவர், நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறாரே?
பதில்: என்ன செய்வது, அந்த நடிகர் ராமனாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால், மாரிசன் என்ற மானை அந்த ராமன் கொன்றதை விட இது என்ன மாபெரும் குற்றமா என்று கேட்டிருப்பார்.
கேள்வி: ராமர் பாலம்- உண்மையா?
பதில்: ராமாயணமே ஆரிய-திராவிடர் போராட்டத்தைத்தான் குறிக்கும் என்று பண்டித ஜவஹர்லால் நேருவும் மற்றும் பல வரலாற்றுப் பேராசிரியர்களும் வலுவான ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்கள். எனவே ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, பொறியாளர்களின் படைப்பு அல்ல.
சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கும் அதையொட்டிய மாநிலங்களுக்கும் எவ்வளவு பயன் விளையும், எத்தகைய பொருளாதார வளம் குவியும் என்பதையெல்லாம் நாட்டுப் பற்றுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை தடுக்க முடியாது-பாலு
இந் நிலையில் போரூரில் சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல் ஆகியவற்றை திறந்து வைத்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு பேசுகையில்,
சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவாகும். இந்த தட்டத்தின் ஒரு பகுதிக்குத் தான் நீதிமன்றம் விதித்துள்ளது. அதுவும் 14ம் தேதி வரை தான் தடை, மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சேது சமுத்திர திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றி விடுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தக் கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.












Click it and Unblock the Notifications